'தம்பதியர் இருவரும் இணைந்து ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பது குடும்பத்திற்கும், அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கும் அதிக நன்மை தரும்' என்கின்றனர், உளவியல் ஆய்வாளர்கள். தம்பதியர் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும்போது அங்கே ஈகோ எட்டிப் பார்க்காது. ஒருவருக்கொருவர் வேலையில் இருக்கும் நெருக்கடிகளை தெரிந்து கொள்வதால் பரஸ்பரம் உதவிகரமாக இருப்பார்கள். இதனால் பல்வேறு நிறுவனங்களில் தம்பதியர் இருவரும் ஒன்றாக பணிபுரிவதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். அவர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம். இருவருக்கும் இணைந்து பேசப் பழக அதிக நேரம் கிடைக்கும். வீட்டுக்கு செல்வது, வீட்டிலிருந்து அலுவலகம் வருவது என இருவருக்குமே பாதுகாப்பான பயணம். அலுவலகப் பணி காரணமாக தாமதமானாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பக்குவமும் ஏற்படும். இருவருக்குள்ளும் ஒற்றுமை உணர்வு, பரிவு, பாசம் அதிகரிக்கும். `நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா?' போன்ற தேவையற்ற சிக்கல்கள் வராது. மேலும் வேறு வகையிலான சந்தேகம், சண்டை, வாக்குவாதம் என அனைத்தும் மறைந்து போகும் என்கிறார்கள். மும்பையை சேர்ந்த பிரபல சைக்காலஜிஸ்ட், தம்பதியர் இணைந்து வேலை செய்வதை வெகுவாக வரவேற்கிறார். வேலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அல்லது வேலையை கட்டாயமாக முடிக்கவேண்டும் என்ற அவசரமான, அவசியமான சூழலில், ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும், மற்றொருவர் அந்த வேலையை முடித்துக் கொடுப்பார். இதனால் அவர்களுடைய வாய்ப்புகள் பறிபோகாது. பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றையும் இருவரும் பகிர்ந்து வேலையை முடிப்பார்கள். வீட்டில் இருக்கும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் இருவரும் இணைந்து பணியாற்றுவதால் நிறுவனத்துக்கு லாபமும் அதிகம் என்கிறார். கொல்கத்தாவை சேர்ந்த மனஅழுத்த நிபுணர், இதுவொரு நல்ல விஷயமாகும். பெரிய நிறுவனங்கள் அனைத்தும் இந்த கருத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினால் இன்றைய இயந்திரத்தனமான உலகில் மனிதனின் மனதில் ஏற்படும் அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதனால் அவர்களுக்குள் ஒற்றுமையும், ஒருங்கிணைப்பு தன்மையும் அதிகரிக்கும். அவர்களுக்கு இடையே நட்பு பாராட்டப்படும். இப்படி ஒரே நிறுவனத்தில் இருவரும் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சி அதிகரித்து, தங்களது குடும்பத்தேவைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்வார்கள். பொருளாதார ரீதியாக வீடு, நிலம், சொத்து மற்றும் வங்கி சேமிப்பு என திட்டமிடல் அதிகரிக்கும். இருவருக்குள்ளும் எச்சரிக்கை உணர்வும், பரஸ்பரம் உதவும் மனப்பான்மையும் மேம்படும் என்கிறார். |