• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, February 24, 2011

    ஆசைகளை அழிக்கும் கருவி எது?

    மனிதனுடைய மனம், எப்போது அமைதியாக இருக்கிறதோ, அப்போது தான் சுகம் ஏற்படும். இந்த அமைதி எப்படி, எப்போது கிடைக்கும் என்றால், அவனது மனம் கட்டுப்படும் போது தான். மனதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், முதலில் ஆசை, பேராசை இவைகளை கட்டுப்படுத்த வேண்டும். இதை, வைராக்கியத்தால் கட்டுப்படுத்தலாம். மனம் முரட்டுக் குதிரையை போன்றது. அது, எங்கெல்லாமோ ஓடும். அதை ஒரு நிலைப்படுத்தி, சாதுவாக இருக்க செய்ய வேண்டுமானால், அதற்கான வழி, தியானம் தான். அந்த பகவானை குறித்து தியானம் செய்து கொண்டே இருந்தால், மனம் மற்றவைகளிடம் செல்லாது. மனதை ஒரு முகப்படுத்தி, பகவத் தியானத்தில் வைத்தால், மனம் தெளிவு பெறும்; அமைதி ஏற்படும்.
    வைராக்கியம் என்பது, அசைக்க முடியாத, மாற்ற முடியாத தீர்மானம். நாம் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரமாவது தனிமையில் அமர்ந்து, தியானத்தில் ஈடுபட வேண்டும். அப்படிச் செய்ய ஆரம்பித்து விட்டால், அந்த அமைதியின் காரணமாக அதே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது விருத்தியாகி, தியானத்தின் நேரம் கூடுதலாகும்.
    இப்படி தியானமும், வைராக்கியமும் இருந்தால், அதன் எதிரிகளான காம; குரோதங்கள் அடிபட்டு ஓடிப் போகும். மனிதனின் வாழ்க்கை நாசமாவதற்கு காரணமே, இந்த காம, குரோதங்கள் தான். இப்படியாக, மனம் என்ற முரட்டுக் குதிரையை, வைராக்கியம் என்ற சாதனத்தால் அடக்கி, தியானம் என்பதில் கொண்டு வந்து நிறுத்தினால், பின்னர் அந்த மனம், தியானத்தில் ஈடுபட்டு விடும். ஒரு சிலர், தியானம் செய்வதற்காகவே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அதில் ஈடுபட்டு, பின்னர் எழுந்து வருவர். அப்போது, அவரது மனம் தெளிவாகவும், அமைதியாகவும் இருக்கும். இந்த மாதிரியான அமைதி தான் மனிதனுக்கு தேவை.பகவானை குறித்து தியானத்தில் இருந்து, பிறகு எழுந்து வரும் போது, அவரது மனதில் எந்தவித கெட்ட எண்ண அலைகளோ, ஆசைகளின் சீற்றமோ இருக்காது. இது ஏன்? மனதை விட்டு காம, குரோதங்கள் அந்த நேரம் அகன்றிருக்கிறது. இது போன்றே எப்போதும் இருக்குமா என்றால், இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆசைகள் வெட்ட, வெட்ட துளிர் விட்டுக் கொண்டே இருக்கும். அதனால், அதை வேருடன் வெட்ட வேண்டும். அப்படி வெட்டக் கூடிய கத்தி தான் வைராக்கியம். இது எப்படி, எங்கே கிடைக்கும் என்றால், முயற்சி செய்தால் கிடைக்கும். ***