• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Monday, January 31, 2011

    இதயத்தை பாதுகாக்க...

    Blocks in blood vessels - Food Habits and Nutrition Guide in Tamil டாக்டர் எஸ்.எஸ்.அர்த்தநாரி:மனித உயிருக்கு உத்திரவாதமில்லை. நேற்று இருந்தவர் இன்றில்லை. "10 நிமிடங்களுக்கு முன் நன்றாக பேசிக்  கொண்டிருந்தவர், திடீரென போய் விட்டாரே. இன்று காலை கூட என்னிடம் தொலைபேசியில் பேசினார். இறந்து விட்டதாக செய்தி வருகிறதே. நேற்று நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவர் இன்று பக்கவாதம் தாக்கி முடமாகி விட்டாரே" என்று பலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் என்ன? இவற்றை எப்படி தடுப்பது? என்பதைப் பற்றி கீழே பார்ப்போம்.
    ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புதான் காரணம். இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது மாரடைப்பாக உயிரை மாய்க்கிறது. மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது பக்கவாதமாக பரிமாணமெடுத்து மனிதனை முடக்கி விடுகிறது. துடிக்கும் மனித இதயம், மனிதனுக்கும் வாழ்வை வழங்குகிறது. மனிதன் வாழ வேண்டுமானால் அவனது இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடித்தே ஆக வேண்டும். இவ்வாறு துடித்து துடித்து மனிதனுக்கு வாழ்வை வழங்கும் இதயம் துடிப்பதற்கு சக்தி தேவை. அந்த சக்தி இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்கள் மூலம்தான் இதயத்திற்குக் கிடைக்கிறது. இந்த ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைபடுகிறது. இதனால், நெஞ்சுவலி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதனைப் போல் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது பக்கவாதமாக பரிமாணம் எடுத்து மனித வாழ்வை சீர்குலைக்கிறது.
    இதயத்திற்கும் மூளைக்கும் ரத்தம் மற்றும் தேவையான சத்துக்களைக் கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் இதயத்தைப் போலவே சுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது.
    ரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய 'நைட்ரிக் ஆக்சைடு' என்ற ரசாயனப் பொருள் உதவுகிறது. இது நமது உடலிலேயே உற்பத்தி ஆகும் பொருள். இதுதான் ரத்தக் குழாய்களுக்குள் சென்று அவற்றை சுருங்கி விரிய உதவுகிறது.
    உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும், குருதியில் கொழுப்புச் சத்து மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது 'நைட்ரிக் ஆக்சைடு' சுரப்பது குறைகிறது. மேலும் மன இறுக்கமும், மனக்கவலையும் கூட நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதைக் கெடுக்கிறது. புகை பிடிப்பது, மது அருந்துதல், அசைவ உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்றவை கூட இந்த நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதைக் குறைக்கிறது. நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது ரத்தக் குழாய் சுருங்கி விரிவது குறையும். அப்பொழுது ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிய தொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்து விடும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்பாகிறது.
    ரத்தக்குழாய் அடைப்புகள் வராமல் தடுப்பது எப்படி?
    ரத்த அழுத்தத்திற்கு சரியான மருந்துகள் உட்கொண்டு அதை சீராக வையுங்கள். சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். கொழுப்புள்ள பொருட்களான நெய், வெண்ணெய், தேங்காய், எண்ணெய், முட்டை மஞ்சள்கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவற்றைத் தவிர்த்திடுங்கள். சிகரெட்டைத் தூக்கி எறியுங்கள். மதுபாட்டில்களை காலி செய்வதை நிறுத்துங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளையும், நெய்யால் செய்த பண்டங்களையும் குறையுங்கள். உப்பு அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். இனிப்பான பழங்கள், கிழங்குகள், பழச்சாறுகள் இவற்றை நீரிழிவு நோயாளிகள் எடுத்தல் கூடாது. இவற்றை விட மேலானது உடற்பயிற்சி. நாள்தோறும் காலை, மாலை அரை மணி நேரம் நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள். சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உணவு வகைகளை அதிகம் உட்கொள்வதைக் குறையுங்கள். உங்கள் இதயம் பாதுகாப்பாக இருக்கும்.