உடலுக்கு தீமை விளைவிக்கும் அதிக கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் நினைவாற்றல் பாதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பாரிசில் உள்ள ப்ரெஞ்ச் நேஷனல் சுகாதாரத் துறை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சாரா கபாஷியன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
நடுத்தர வயதுள்ளவர்கள் இப்படிப்பட்ட பாதிப்பால் அதிகம் அவதிப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இத்தகைய பாதிப்புகள் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களை ஏற்படுத்தும் என்பது முந்தைய ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஆய்வு ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு நினைவாற்றலை பாதிக்கும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. ஆய்வுக்காக 55 வயதுக்கு உட்பட்ட 3486 ஆண்களும், 1341 பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு தொடர் ஆய்வுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
இதில் உயர் ரத்த அழுத்தமும், அதிக கொழுப்பும் நினைவாற்றல் பாதிப்பை ஏற்படுத்தியது உறுதியாகி உள்ளது. ஆரம்ப கட்ட சிகிச்சை, ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றால் இந்த பாதிப்பில் இருந்து விடுபட முடியும் என்பது ஆராய்ச்சியாளர்கள் தரும் உத்தரவாதம். |