இதயத்துக்கு உகந்த உடற்பயிற்சிகளில் சிறந்தது சைக்கிள் பயிற்சி. இது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த எளிமையான உடற்பயிற்சியாகும். ஆனால் அது கூட ஆபத்தாக முடிகிறதாம் அதிகமாக ஓட்டும் போது. தினமும் சைக்கிளில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வது மாரடைப்புக்கு வழி வகுக்கும் என்று எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
மாரடைப்பால் உயிரிழந்த பெரும்பாலானவர்கள் குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது. உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் சரியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் மருத்துவர்கள் உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என்கின்றனர்.
ஆனால் எல்லாமே அளவோடு செய்ய வேண்டுமாம். சைக்கிளை தொடர்ந்து ஓட்டும் போது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டி உள்ளது. இதனால் இதயத்துக்கு வேலைபளு கூடுதலாகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தூய்மையற்ற காற்றை சுவாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது நுரையீரலை பாதிக்கும். இந்த பாதிப்பு தொடரும் போது இதய நோய் மெல்ல எட்டிப் பார்க்கும். கவனிக்காமல் விட்டால் மாரடைப்பாக மாறி உயிரையே பறிக்கும் அவலம் நிகழ்கிறது என்று எச்சரிக்கிறது அந்த ஆய்வு. |