• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Wednesday, February 16, 2011

    குழந்தை வளர்ப்பு:மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பட!

    Memory enhancement techniques for students - Child Care Tips and Informations in Tamil
    "பரீட்சைக்கு நல்லாத்தான் படிச்சேன். ஆனா தேர்வு அறைக்குள்ள நுழைஞ்சு வினாத்தாளை வாங்கிய உடனே எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. படிச்சது எல்லாம் மறந்து போகுது" என்று புலம்பும் மாணவச் செல்வங்கள் ஏராளம்.
    "நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. எல்லோருடைய மூளைக்குள்ளும் ஒரு நூலகம் போன்ற நினைவு அடுக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் தகவல்களை சேமிக்கும் முறையை வைத்து, உங்கள் நினைவுத்திறன் அமைகிறது" என்று விஞ்ஞானம் சொல்கிறது.
    நூலகப் புத்தகங்களை அகர வரிசைப்படி தொகுக்காவிட்டால், தனியொரு புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது எவ்வளவு சிரமமோ; அதே போன்று நினைவு அடுக்குகளில் படிக்கும் தகவல்களை முறைப்படி தொகுக்கவில்லை எனில் தேவையான போது வெளியே எடுப்பது கடினம்.
    சரியான முறையில் படித்தால் தகவல்கள் பிசிறில்லாமல் நேரடியாக மூளையின் நினைவகத்தில் தொகுக்கப்பட்டு விடுகிறது. எனவே, மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி பாடங்களைப் படித்தால் அவர்களின் நினைவாற்றல் திறன் மேம்படும் என்று வல்லுனர்கள் கூறி உள்ளனர்.
    சரியான முறையைப் பின்பற்றி பாடங்களைப் படிக்க சில நிபந்தனைகள்:
    1. பொருள் உணர்ந்து படி:
    ஆர்வம் இருந்தால் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவது எளிது. அதே போன்று படிப்பதை வெறும் கடமையாக நினைக்காமல், ஆர்வத்துடன் கற்க முயற்சி செய்யுங்கள். மேலும் ஒருவரி படித்தாலும் அதன் உட்பொருளை உணர்ந்து படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
    2. படிக்கும் சூழல்:
    இரைச்சல் மிகுந்த இடங்களில் வசித்தாலும் கருத்தூன்றி படித்து சிறந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். அமைதியான சூழலில் கவனமின்றி படித்து தேர்வில் தோல்வி கண்ட மாணவர்களும் இருக்கிறார்கள். படிக்கும் இடத்தை விட, படிக்கும் போது உங்கள் மனம் தெளிவாக குழப்பமின்றி இருப்பதே முக்கியம்.
    3. நினைவுக்குக் கொண்டு வருதல்:
    படிக்கும் பாடத்தை அடிக்கடி நினைவுகூர்வது சிறந்த மாணவர்களுக்கு அழகு. படித்த விஷயங்களை அடிக்கடி மனத்திரையில் ஓடவிட்டு பயிற்சி செய்வது ஞாபகத்திறனை அதிகப்படுத்தும் வழிகளில் முக்கியமானது. இதனால் பாடங்கள் மறக்காமல் இருப்பதுடன், தேர்வு பயமும் தோன்றாது.
    4. மனப்பாடம் கூடாது:
    மாணவர்களின் கற்கும் முறைகளில் உள்ள பெரிய குறைபாடு மனப்பாடம் செய்தல். பாடப் புத்தகத்தில் உள்ள வரிகளை உருக்குலையாமல் அப்படியே மனப்பாடம் செய்து எழுதுவதில் எந்தவொரு பலனும் இல்லை. அதில் மாணவர்களுக்கான எழுத்து நடை கொஞ்சமும் இருக்காது. கல்லூரி மாணவர்களை விட, பள்ளி மாணவர்களே மனப்பாடம் செய்வதில் கில்லாடியாக உள்ளனர். கல்லூரி படிப்பிற்குத் தேவையான அடிப்படை பாடங்கள் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் நடத்தப்படுகின்றன. அப்போது நீங்கள் பாடத்தைப் புரிந்து படிக்காமல் மனப்பாடம் உத்தியை செயல்படுத்தினால் கல்லூரியில் திண்டாட வேண்டி இருக்கும். அதாவது கல்லூரி பேராசிரியர் நீங்கள் பள்ளியில் படித்த அடிப்படை பாடத்தை மேலோட்டமாக நடத்தி விட்டு, அடுத்த பகுதிக்கு சென்றால் கல்லூரியிலும் நீங்கள் விழிக்க வேண்டி இருக்கும். அதே நேரத்தில் புரிந்து படித்தால் அது காலத்திற்கும் மறக்காது என்பதால், கல்லூரியிலும் நீங்கள் கலக்க உதவியாக இருக்கும்.
    5. அன்றே படிக்க வேண்டும்:
    பாடங்களை அனுதினமும் படித்தால் பாடச்சுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. படிக்கும் போது முக்கிய குறிப்புகளைத் தனியாக ஒரு டைரியில் பாடத் தலைப்பு வாரியாக குறித்துக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து செய்வதால் மொத்தப் பாடத்திற்கான குறிப்புகளும் அந்த டைரியினுள் அடங்கிவிடும். அடிக்கடி அந்த குறிப்புரைகளைக் கொண்டு நீங்கள் படித்ததை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதனால் தேர்வின் போது பாடப்புத்தகம் முழுமையையும் மீண்டும் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது.