![Fitness Tips after delivery - Food Habits and Nutrition Guide in Tamil Fitness Tips after delivery - Food Habits and Nutrition Guide in Tamil](http://www.koodal.com/contents_koodal/health/images/after-delivery-exercise.jpg)
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தன் உடல் நிலையையும் வயிற்றில் வளரும் குழந்தையையும், கவனமாக பார்த்துக் கொள்வது முதல் கடமை என்றால், குழந்தை பிறந்த பிறகோ அதற்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய பச்சை உடம்பு வலுப்பெறுவதற்கும், தன்னை முன்னைவிட நன்றாக கவனித்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு சத்தான உணவுகள் மட்டும் போதாது. மருத்துவருடைய ஆலோசனையின்படி உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.
உங்களுடையது நார்மல் டெலிவரி என்றால்...!
டெலிவரியான ஒரு வாரத்திலேயே உடம்பு நார்மலான நிலைக்கு வந்துவிடும் என்றாலும் பிரசவத்திற்குப் பின்பு மொத்த உடல்நிலையும் ஓய்ந்துதான் இருக்கும் என்பதால், முதலில் உணவில்தான் நீங்கள் கவனம் கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் அதிகம் சுரக்க நிறையப் பால் குடிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பிரசவத்தின்பொழுது இழந்த சக்தியைத் திரும்பப் பெற புரோட்டீன், கார்போஹைட்ரேட், விட்டமின்கள் கலந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.
குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது சாப்பிட்ட இரும்புச்சத்து, கால்சியம் மாத்திரைகளை தாய்ப்பால் நிறுத்தியபின் 6 மாதங்கள் வரை சாப்பிட வேண்டும்.
தாய்ப்பால் கட்டாயம் ஒரு வருடமாவது தர வேண்டும். இது குழந்தைக்கு மட்டுமல்ல, உங்கள் உடல் நலனுக்கும், சீக்கிரம் கருத்தரிக்காமல் இருக்கவும் உதவும்!
வெஜிட்டேரியன் என்றால் பழங்கள், கீரைகள், காய்கறிகள், பருப்புவகைகள் சாப்பிடலாம்.
நான்-வெஜிடேரியன் என்றால் மீன், முட்டை, ஈரல் சாப்பிடலாம்.
உங்களுடையது சிசேரியன் எனில்...
அதிகமான வெயிட் தூக்கக் கூடாது. அதற்காக ஒரேடியாக ஓய்வு எடுத்தாலும் உடம்பு பெருத்துவிடும். ஸோ, நிறைய நடக்க வேண்டும்.
உடனடியாகக் கருத்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும். மூன்று வருடங்கள் வரை அடுத்த குழந்தையைத் தள்ளிப் போடலாம்.
ஏனென்றால் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தால் உடம்பில் ஸ்டோர் ஆகி இருக்கும் புரோட்டீன் சத்து எல்லாம் கரைந்துவிடும். இதுதான் பெண்களுக்கு அனீமியா வருவதற்குக்காரணம். தவிர உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைந்துவிடும்.
தாய்ப்பால் கொடுத்துக் கொண்டு இருக்கும்போது கர்ப்பம் தரிக்காது என்றாலும்கூட விதிவிலக்குகளும் உண்டு. ஆதலால் உறவில் கவனம் தேவை.
பிரசவத்துக்கு அப்புறம் பிறப்பு உறுப்பில் துர்நாற்றம் அடித்தாலும், விட்டு விட்டுத் தீட்டு வந்தாலும், அதிகமாக வலித்தாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
ஒரு தாய் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் அவள் குடும்பமும் ஆரோக்யமாக இருக்க முடியும். அதிலும் குறிப்பாக பிரசவமான பெண்கள் உடலின் உள் ஆரோக்கியத்தை மட்டும் பார்க்காமல், வெளி ஆரோக்யத்தையும் அதாவது எக்ஸர்சைஸ் மூலம் உடலையும் ஷேப்பாக சிக்கென்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தாம்பத்யமும் தடுமாறாமல் செல்லும்!
என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்?
நார்மல் டெலிவரி எனில், சில வாரங்களிலேயே வயிற்றுத் தசைகள், இடுப்புத் தசைகள் சுருங்கப் பயிற்சிகள் செய்ய வேண்டும். இப்பொழுது அந்தப் பயிற்சிகளைச் செய்தால்தான் 50, 60 வயதுகளில்கூட பிறப்புறுப்பின் "தசைகள்" வலுவாக இருக்கும்.
உடற்பயிற்சிகள் செய்தால்தான் ஹெர்னியா, கர்ப்பப்பை சரிதல் போன்ற பிரச்னைகளைத் தடுக்க முடியும்.
சிசேரியன் டெலிவரி எனில், சிசேரியனுக்கு 2 மாதத்துக்கு அப்புறம்தான் உடல் நார்மலுக்கு வரும். அதற்குப் பின் பயிற்சிகள் செய்யலாம்.
எந்த பிரசவமாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனைப்படிதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது முக்கியம்!