![Good Food consumption Tips - Food Habits and Nutrition Guide in Tamil Good Food consumption Tips - Food Habits and Nutrition Guide in Tamil](http://www.koodal.com/contents_koodal/health/images/2011/good%20foods-606.jpg)
விலங்கு புரதம் வேண்டாம்:
புரதத்துக்காக கால்நடைகளிலிருந்து கிடைக்கும் வெண்ணை, பால், இறைச்சி, பாலாடைக்கட்டி, முட்டை போன்றவற்றை அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. தாவர புரதங்களைப் போலில்லாமல் இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. இவை உங்களுக்கு ஒரு கனமான, வசதியற்ற நிலையை அளிக்கக்கூடும். நிலையை மேலும் மோசமாக்கும் விதத்தில், ஜீரணம் ஆக வேண்டும் என்பதற்காக அமிலவகைப் பானங்களை அருந்தும் வழக்கம் இருக்கிறது (உதாரணத்துக்கு பீட்சா சாப்பிட்ட பிறகு சோடா பருகுவது). அசிட்டிக் உணவுகளான சர்க்கரை, பால், பால் பொருட்கள், செயற்கைக் குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும், ஆல்கலைன் உணவு வகைகளான பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதும் நல்லது என்பதே.
பால்பொருட்களைத் தவிர்க்கலாம்:
உங்களால் தினசரி பால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் சோயா பால் அல்லது பாதாம் பால் சாப்பிடலாம். அதிலும் தற்போது பெரும்பாலும் பால் பொருட்கள் கலப்படமாக வருகின்றன என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.
எண்ணை உண்மை:
நீங்கள் உங்கள் உணவில் எவ்வளவு எண்ணை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பாருங்கள். கொட்டைகள், விதைகளிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் எண்ணை தான் சிறந்ததே தவிர, ரீபைண்ட் ஆயில் அல்ல. அதில் நார்ச்சத்து இழக்கப்பட்டு விடுகிறது.
சமைக்கும் முறையை மாற்றுங்கள்:
எண்ணையில்லாமல், ஆரோக்கியமான முறையில் சமைப்பதற்குச் சற்றுக் கூடுதல் நேரமாகும். ஆனால் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் நன்மையே. கட்லட் போன்றவற்றை நிலக்கடலை மாவு போட்டு ரோஸ்ட் செய்யலாம். அதற்கு சற்று கூடுதல் நேரமானாலும், நிலக்கடலையில் இருந்தே போதுமான எண்ணை கிடைத்து விடும்.
முழுமையாகச் சாப்பிடுங்கள்:
பெரும்பாலான உணவுப் பொருட்களில் சத்துக்களும், மணமும் அவற்றின் தோலில்தான் இருக்கிறது. நீங்கள் தோலை உரிக்கும்போது சத்துகள் அதனுடன் போய்விடுகின்றன. காய்கறிகளுக்கு மணமூட்ட நாம் ஏன் மசாலாவையும், சாஸ்களையும் சேர்க்கிறோம் என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? நீங்கள் தோலை உரிக்கும்போது அதனுடன் மணத்தையும் அகற்றி விடுகிறீர்கள். முழு உணவாக நீங்கள் சமைக்கப் பழகினால் மசாலா சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளலாம். அதேபோல பட்டை தீட்டப்பட்ட பளபள அரிசிக்குப் பதிலாக பட்டை தீட்டப்படாத அரிசி நல்லது. மைதாவுக்குப் பதிலாக ஆட்டாவைப் பயன்படுத்தலாம்.
அதிகமாக அலச வேண்டாம்:
காய்கறிகள், பழங்கள், தானியங்களை தண்ணீரில் அலசுவது நல்லதுதான். ஆனால் அதுவே அதிகமாகிவிட வேண்டாம். அப்படிச் செய்தால் அனைத்துச் சத்துகளையும் இழக்க நேரிடும். காய்கறிகளை தண்ணீரில் வேகவைப்பதை விட ஆவியில் அவியுங்கள். அதற்குத் தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் என்பதுடன், சத்துகளையும் இழக்காது இருக்கலாம். காய்கறிகளை வெட்டியபிறகும் அலச வேண்டாம்.
பழங்களைத் தனியாகச் சாப்பிடுங்கள்:
உணவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது பழங்கள் வேகமாக ஜீரணமாகின்றன. அவை சர்க்கரைத்தன்மையைக் கொண்டுள்ளதால் உங்கள் வயிற்றில் நொதிக்கின்றன. அது பொதுவாக நல்லதுதான். ஆனால் நீங்கள் நிறைய உணவு சாப்பிட்டபின் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது. நீண்ட நேரம் நொதித்தல் நடைபெற்று வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சாறாக இல்லாமல் முழுப் பழமாகச் சாப்பிடுவதும் நல்லது. பழச்சாறில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் பழமாகச் சாப்பிடும்போது அதிக நார்ச்சத்தைப் பெறலாம்.
குரங்கைப் பின்பற்றுங்கள்:
இயற்கையே நமக்குச் சிறந்த ஆசிரியர். அந்த வகையில் நமது நெருங்கிய உறவினரான குரங்கு நமக்கு வழிகாட்டுகிறது. எப்போதாவது குரங்கு ஆப்பிளைத் தோலை உரித்துச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் வாழைப்பழம், ஆரஞ்சு போன்றவற்றை அது நிச்சயமாகத் தோலை உரித்துச் சாப்பிடும். அதே பாணியை நீங்கள் உங்களின் உணவு முறையிலும் பின்பற்றுங்கள். தோல் உரிக்கத் தேவையில்லாத காய்கறிகள், பழங்களைத் தோல் உரிக்காதீர்கள்!