
உண்மையில் அது சொர்க்கம்தான்!
அங்கே வசித்த "ஷூன்சா" என்னும் பழங்குடி மக்கள், சர்வ சாதாரணமாக 120 வயது வரை வாழ்ந்தார்கள். 90 வயதிலும் குழந்தை பெற்றுக் கொண்டார்கள். புற்றுநோய், இதய நோய், பிளட் பிரஷர் என எதுவுமே அவர்களுக்கு வந்ததில்லை. பனிபடர்ந்த மலைப் பகுதியில் வசித்தாலும், ஜலதோஷம், ஜூரம் வந்து ஒருவரும் படுத்ததில்லை. யாரும் உடல் பெருத்து, மூச்சு வாங்குவதில்லை. நூறு வயதில் அவர்களுக்கு ஊசியில் நூல் கோர்க்கும் அளவுக்கு கண் பார்வை தெளிவாக இருந்தது. எண்பது வயது பாட்டியைப் பார்த்தால், நாற்பது வயது ஐரோப்பிய நங்கை மாதிரி இருந்தார். தோல் சுருக்கம் இல்லாததால் வயதானதே தெரியவில்லை.
நாகரிக மனிதர்கள் என்று சொல்லிக்கொண்டு நகரங்களில் வாழ்பவர்கள் எல்லா நோய்களாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, இந்தப் பழங்குடியினர் மிக சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
இது எப்படி சாத்தியம்? அவர்களது உணவுப் பழக்கம்தான் இந்த அற்புத வாழ்க்கையை சாத்தியப்படுத்தியது. ஷூன்சா பழங்குடியினரின் பிரதான தொழில் விவசாயம். இயற்கை முறை விவசாயத்தில் நம்பிக்கை கொண்ட அவர்கள். விலங்குகள் மற்றும் தாவரங்களின் எல்லா கழிவுகளையும் உரங்களாக பயன்படுத்தினார்கள். கோழிகள் விதைகளைத் தின்றுவிடும் என்பதால் கோழிகளை வளர்க்க அங்கு தடை! இறைச்சிக்காக ஆடுகளை மட்டும் வளர்த்தார்கள். ஆனால், விசேஷ நாட்களில் மட்டும்தான் இறைச்சி!
உணவுக்காக அவர்கள் தினை வளர்த்தார்கள். தினை மாவும், தினைச்சோறும்தான் முக்கிய உணவு (இதன் பிறகே தினையின் அருமை தெரிந்து, அதை ஐரோப்பிய நாடுகளில் வளர்க்க ஆரம்பித்து, இப்போது தினை மாவில் செய்யப்படும் பிரட், ஒரு முக்கிய சத்துணவாக அங்கே சக்கைப்போடு போடுகிறது. ஆனால், நம் ஊரில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தினை விளைந்த நிலங்கள் இப்போது வேர்க்கடலையை மட்டுமே விளைவிக்கின்றன. நாமும் தினை சாப்பிடுவதை மறந்து விட்டோம்.)
கோதுமை, பார்லி போன்றவையும் சாப்பிட்டார்கள். இது தவிர, உணவில் ஏராளமான பழங்கள் சேர்த்துக் கொண்டார்கள். ஆப்பிள், செர்ரி, பேரிக்காய், வாதுமை கொட்டை என எல்லாம் அங்கே விளைந்தது. கீரைகள், கேரட், பட்டாணி, முள்ளங்கி, நூக்கல், என காய்கறிகள் விளைவித்து சாப்பிட்டார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, கடைகளில் விற்கும் செயற்கை ரசாயனங்கள் எதையும் அவர்கள் உணவில் சேர்த்ததில்லை. வேளா வேளை உணவுக்கு இடையே நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கமும் கிடையாது.
ஆனால், நாம் என்ன செய்கிறோம்? உணவு வகைகளை பற்றிய பாரம்பரிய அறிவுக்கு முன்னுரிமை தராமல், விளம்பரங்களால் ஈர்க்கப்படுகிறோம். சுவை நன்றாக இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்துவிட்டு, அது உடம்புக்கு நல்லதா என்பதைப் பார்க்க மறந்து விடுகிறோம்.
இந்த அடிப்படை தவறுதான் எல்லா நோய்களுக்கும் காரணமாகி விடுகிறது.
"அமுதம் விஷமாக மாறுவதும், விஷம் அமுதமாக மாறுவதும் அதை சாப்பிடும் முறையில்தான் இருக்கிறது" என்று சரக சம்ஹிதையில் சொல்லியிருக்கிறது. " உணவு தான் எல்லா உயிரினங்களின் ஜீவன். ஆனால், அதையே தவறான வழியில் உட்கொண்டால் அது விஷமாகி உயிரைக் கொல்லும், அதே நேரம், விஷத்தையே முறையான வழியில் உட்கொண்டால் அது அமுதமாகி விடும்" என்று சொல்கிறார் சரகர்.
ஆச்சரியமாக இருக்கிறதா? கொஞ்சம் விளக்கமாகவே பார்ப்போம்.
தவறான விதத்தில் உணவு உண்பதால் ஒருவரது உடலில் ஏற்படும் மோசமான விளைவுகளை ஐந்து விதங்களாகப் பிரிக்கிறது ஆயுர்வேதம்.
ஒன்று... உணவின் அளவைக் குறைத்து சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு. வறுமை காரணமாக, போதிய அளவு உணவு கிடைக்காமல் பலவேளை பட்டினி கிடந்து, கிடைக்கும் கொஞ்சம் உணவை உண்டு வாழ்க்கையை ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்பு, இப்படி பாதிக்கப்படுபவர்களுக்கு நல்ல உணவுதான் மருந்து.
இதே போலவே இருக்கும் இன்னொரு வகை... உணவில் சத்து குறைந்திருப்பதால் ஏற்படும் பாதிப்பு. இவர்கள் ஏழைகள் கிடையாது. ஆனால் எது சத்துள்ள உணவு என்று தெரியாமல் வெறும் சக்கைகளை சாப்பிட்டு வைப்பார்கள். நிறைய சாப்பிட்டாலும் உடலுக்கு போதுமான ஊட்டம் கிடைக்காது. இதனால் சோகையாக இருப்பார்கள். அடிக்கடி உடம்புக்கு முடியாமல் படுத்து அவதிப்படுவார்கள்.
உணவின் அளவு, சத்து இரண்டிலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிடுவது மூன்றாவது ரகம். சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்போது இவர்களால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு காட்ட முடியாது. இஷ்டத்துக்கு வெட்டி விட்டு உடல் பருத்து, தேவையற்ற கொழுப்பு சேர்ந்து, உயர் ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் என எல்லாவற்றையும் வரவேற்று உடலில் தங்க வைத்துக் கொள்வார்கள்.
உடலுக்கு பொருத்தமில்லாத உணவுகளை சாப்பிட்டு உபாதைகளை வரவழைத்துக் கொள்வது அடுத்த ரகம். ஒவ்வொருவரது உடலும் தனித்தன்மை வாய்ந்தது. உடலின் பிரகிருதி, குடலின் செரிமான சக்தி ஆகியவற்றைப் பொறுத்து சிலவகை உணவுகளை உடல் ஏற்கும்... சிலவற்றை ஏற்காமல் தொந்தரவு செய்யும்.
உணவு விஷமாகி விடுவது ஐந்தாவது ரகம். உணவைக் கலந்து சாப்பிடும் முறையில் நேரும் தவறின் விளைவு இது. இதனால் வயிறும், ரத்த ஓட்டமும் பாதிக்கப்பட்டு அவதிக்கு ஆளாவார்கள்.
ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு உணவுக்கும் தனித்தன்மை வாய்ந்த குணம் உண்டு. அதை சாப்பிட்டால் உடலுக்கு சூடு அல்லது குளிர்ச்சி உடனடியாகக் கிடைக்கிறது. அதோடு, அந்த உணவு செரித்த பிறகு, உடலில் ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. இரண்டு மூன்று உணவுகளைக் கலந்து சாப்பிடும்போது, அந்த கலவை நல்லதாக இருந்தால் நல்ல விளைவு ஏற்படுகிறது. கெட்ட கலவையாக இருந்தால் மோசமான விளைவுகள் ஏற்படுகிறது. தானியங்கள், பருப்புகள், பழங்கள், மாமிசம்... என ஒவ்வொன்றிலும் எதை எதனோடு சேர்த்தால் சரி... எந்தவிதமான கலவை தப்பு என பெரிய பட்டியலே இருக்கிறது.
உதாரணமாக, பால் சாப்பிடும்போது அதோடு வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது. பாலும் குளிர்ச்சி.... வாழைப்பழமும் குளிர்ச்சி. இரண்டும் இணைந்து குடலுக்கு போகும்போது செரிமான சக்தியைக் குறைத்து மந்தமாக்கி விடும். ஜலதோஷம், இருமல், அலர்ஜி என பாதிப்புகள் வரும்.
இதுபோல, பாலுடன் உப்பு சேர்த்தும் சாப்பிடக் கூடாது, புளிப்பான பழங்கள், உணவுகளையும் பாலோடு சேர்த்து சாப்பிடுவது தவறு. புளிப்பான உணவில் இருக்கும் அமிலங்கள், பாலுடன் வேதிவினை புரிந்து, அதை உறைய வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. இதனால் இரண்டுமே சீக்கிரம் செரிக்காமல் வயிற்றில் அப்படியே தங்கிவிடுகின்றன. வயிற்றுக் கோளாறு ஏற்படுகிறது. பால் பொருட்களோடு மாமிசங்கள் சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் நல்லது.
இதேபோல, பழங்களை உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்துள்ள பொருட்களோடு சேர்த்து சாப்பிடக் கூடாது. பழங்கள் சீக்கிரம் செரிக்கக் கூடியவை. மாவுப் பொருட்கள் செரிமானமாக தாமதமாகும். இரண்டும் சேர்ந்த கலவை வயிற்றுக்குள் போகும்போது குடல் குழப்பத்தில் தவித்துவிடும். மாவுச்சத்துள்ள பொருட்களை முட்டை, டீ, வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிடக் கூடாது.
சிலர் சாப்பிடும் போது ஜில்லென்று ஐஸ்வாட்டர் குடிக்கிறார்கள். இன்னும் சிலர், தண்ணீருக்கு பதிலாக குளிர்பானங்களை குடிப்பார்கள். இரண்டுமே தவறு. குளிர்ச்சியான இவை, செரிமான வேகத்தைக் குறைத்து வயிற்றை மந்தமாக்கி விடும். மிதமான சூட்டிலுள்ள தண்ணீரைக் குடிப்பதுதான் சிறந்தது. இது உணவு இயல்பாக செரிமானமாக குடலுக்கு உதவி செய்யும்.
நாம் சாப்பிடும் உணவு மோசமான கலவையாக இருந்துவிடாமல் பார்த்துக் கொள்வதோடு, ஒவ்வொரு வேளை உணவிலும் இரண்டு அல்லது மூன்று விதமான உணவுகளுக்கு மேல் இல்லாதபடி பார்த்துக் கொள்வதும் அவசியம். அப்படி இருந்தால் குடல் ஓவர் டைம் வேலை பார்க்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு விதமான உணவையும் செரிக்க வைக்க தனித்தனியாக திரவங்களை அது சுரக்க வைக்கும். வித்தியாசமான பல அயிட்டங்கள் என்றால் பலமடங்கு வேலை குடலுக்கு! புரோட்டீன்களை செரிக்க வைக்க அமிலம் தேவை. மாவுச் சத்துள்ள உணவுகளை செரிக்கச் செய்ய காரத் தன்மையுள்ள திரவம்தேவை. இப்படி ஒவ்வொன்றையும் தனித்தனியாக இனம்பிரித்து ஜீரணிப்பது குடலுக்கு பெரிய வேலைதானே!
இரண்டு, மூன்று நல்ல உணவுகளைக் கலக்கும் போது அது உடலுக்கு விஷமாகி விடுவது ஒருபுறம் என்றால், தனியாக சாப்பிடும்போது உடலுக்கு ஒத்துவராத பல உணவுப் பொருட்கள் கூட்டணி சேர்ந்து அமுதமாவதும் நடக்கிறது.
தர்ப்பூசணி, கிர்ணிப்பழம் என நீர்ச்சத்துள்ள பழங்களைச் சாப்பிடும்போது சிலர் அதில் கருமிளகுத் தூளை தூவி சாப்பிடுவார்கள். இந்தப் பழங்களை வெறுமனே சாப்பிட்டால் கபம் அதிகமாகி அதனால் ஜலதோஷம், இருமல் என பாதிப்புகள் வர வாய்ப்பு உண்டு. ஆனால் மிளகுத் தூள் இந்த பழங்களில் இருக்கும் அதிகப்படியான நீர்ச்சத்தை உறிஞ்சி இந்த பாதிப்பைத் தவிர்த்து விடும். வெள்ளரிக்காயில் மிளகுத் தூள் போட்டு சாப்பிடுவது கூட இதற்காகத்தான்!
டீயில் நாம் ஏலக்காய் பொடித்துப் போட்டு சாப்பிடுவதுபோல அரேபியர்கள் காபியில் ஏலக்காய் போட்டு சாப்பிடுவார்கள். ஏலக்காய் போடுவது வாசனைக்காக மட்டும் இல்லை. இது டீ மற்றும் காபியின் அமிலத்தன்மையைக் குறைத்து, வயிற்றில் அமிலத் தொந்தரவு ஏற்படாமல் தடுக்கிறது. மது பானங்கள் நிறைய குடிக்கும் ஐரோப்பியர்கள் அதை ஈடுகட்ட கேரட் ஜூஸ் குடிப்பார்கள். ஆல்கஹாலின் பக்க விளைவுகளை இது சமன் செய்கிறது.
ஏதாவது ஒரு தானியம்.... கூடவே ஒரு பருப்பு என இருக்கிறது. நம் இந்தியர்களின் சமையல் மெனு. இட்லி, தோசை, மாவில் அரிசியோடு உளுந்து சேர்க்கிறோம். சாப்பாத்தியோடு பருப்பு கூட்டு சேர்த்து சாப்பிடுகிறோம், பொங்கல் என்றால் அதில் அரிசியும், பாசிப்பருப்பும் கூட்டணி அமைத்திருக்கிறது. சாப்பாட்டில் அரிசி சாதத்தோடு பருப்பு சாம்பார் சேர்க்கிறோம். சாம்பார் இல்லாவிட்டாலும், காய்கறி கூட்டில் பருப்பு இருக்கிறது. இவ்வாறு நாம் சாதாரணமாக சாப்பிடும் உணவில் கூட இப்படி கச்சிதமான ஆரோக்கியம் தரும் கலவை இருக்கிறது.
இந்த கலவை பற்றி ஆராய்ந்த வெளிநாட்டு அறிஞர்கள் ஆச்சரியம் அடைந்ததில் வியப்பில்லை.
காரணம் - நம் உடலின் இயக்கத்துக்கு இருபது அமினோ அமிலங்கள் தேவை. இவற்றில் முக்கியமானவை, முக்கியமற்றவை என இருண்டு வகைகள். இதில் இரண்டாவது வகையை உடல் தானாகவே உற்பத்தி செய்து கொள்கிறது. முதல் வகை வெளியிலிருந்து உணவாக வந்தால்தான் உண்டு. இந்த அமினோ அமிலங்கள் அரிசி, கோதுமை போன்ற தானியங்களிலும் உளுந்து, துவரை, கடலை, பாசிப்பருப்பு போன்றவற்றிலும் தான் அதிகம் இருக்கிறது. இவை இரண்டையும் கலந்து சாப்பிடும் போது உடலுக்கு தேவையான அளவுக்கு அமினோ அமிலங்கள் கிடைத்து விடுகின்றன. இந்த சத்தான கலவை வெளிநாட்டு உணவுகளில் கிடையாது.