ரெட் ஒயின் மற்றும் நிலக் கடலையில் அதிகம் இருக்கும் "ரிஸ்வரட்ரால்" என்ற வேதிப்பொருள் மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது.மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சி அமெரிக்காவின் கிளைவ்லேண்ட் நகரில் உள்ள லெனர் ஆய்வு மையத்தில் நடக்கிறது. ஆராய்ச்சி பற்றி மையத்தின் தலைவர் சாரிஸ் எங் கூறியதாவது: உறுப்பு மாற்று ஓபரேஷன், எலும்பு மஜ்ஜை மாற்று ஓபரேஷன் ஆகியவற்றின்போது சில நேரம் உடலின் எதிர்ப்பு சக்தியாலேயே பக்கவிளைவுகள், பாதிப்புகள் ஏற்படலாம்.
இதை கட்டுப்படுத்த ரபாமைசின் என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. சொந்த செல்களையும், வெளி செல்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இது செயல்படுகிறது. மார்பக புற்றுநோய் கிருமிகளை கட்டுப்படுத்தவும் ரபாமைசின் பயன்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டது. முதலில் இது வெற்றிகரமாகவும் செயல்பட்டது.
ஆனால் நாளடைவில் ரபாமைசினுக்கும் புற்றுநோய் கிருமிகள் கட்டுப்படுவதில்லை என தெரியவந்தது. இதுதொடர்பான ஆராய்ச்சி தீவிரப்படுத்தப்பட்டது. ரபாமைசினுடன் ரிஸ்வரட்ரால் என்ற மருந்தை சேர்க்கும்போது மார்பக புற்றுநோய் கிருமிகள் பெருமளவு கட்டுப்படுகிறது என்று கண்டறியப்பட்டது.
இந்த இரண்டும் சேர்ந்து உடலில் புற்றுநோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் ஜீன்களையும் வலுவாக்குகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வக அளவில் இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. ரிஸ்வரட்ரால் என்பது பாலிபீனால் வகையை சேர்ந்தது. ரெட் ஒயினில் இது அதிகம் உள்ளது.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெட் ஒயின் கொடுத்து சோதனை நடத்தப்பட உள்ளது. கீமோதெரபி சிகிச்சையுடன் ரபாமைசின் மற்றும் ரிஸ்வரட்ரால் கூட்டணி மருந்தையும் கொடுப்பது மார்பக புற்றுநோய் பாதிப்பை கணிசமாக கட்டுப்படுத்தும் என்று தெரிகிறது.
ரெட் ஒயின் மட்டுமல்லாமல் நிலக்கடலை, அவித்த கடலை, சிவப்பு திராட்சை ஆகியவற்றிலும் ரிஸ்வரட்ரால் அதிகம் இருக்கிறது. இவற்றை அதிகம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட முடியுமா என்பது தொடர் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபணமாகும். |