• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, February 17, 2011

    பட்டர் ஃப்ரூட் ரகசியம்!

    Homemade Avocado face pack - Beauty Care and Tips in Tamil
    வீட்டிலேயே கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு நம் வறண்ட சருமத்தை அழகாக பாதுகாப்பது எப்படி என்று பார்ப்போம்.
    வறண்ட சருமம்:
    முகத்தில் பாலைத் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவலாம். அல்லது வீட்டில் பன்னீர் இருந்தால் பால் ஏட்டையும் பன்னீரையும் கலந்து முகத்தில் தேய்த்து பதினைந்து நிமிஷங்கள் ஊறவைத்துப் பின் கழுவினால் முகம் ப்ரஷ்ஷாக இருக்கும்.
    தேன், கிளிசரின் இவையெல்லாம் நல்ல மாய்ச்சரைசர், இவற்றில் ஏதாவது ஒன்றைக் கூட உபயோகித்து லேசாக முகத்தில் வட்டமாக மசாஜ் செய்வதுபோலத் தடவி ஊறவைத்துப் பின் கழுவவும். தேனைப் போடும் பொழுது புருவம், கண்கள், கண்களைச் சுற்றியுள்ள இடங்களைத் தவிர்க்கவும்.
    பயத்த மாவுடன் தேனும், பன்னீரும் கலந்து முகத்திற்குப் பேக் போட்டு ஊறவைத்துக் கழுவலாம். தேன் உபயோகிக்கும் பொழுது சுத்தமானதாக இருப்பது நல்லது. கசகசாவை வெந்நீரில் இரவில் ஊறவைத்துவிட வேண்டும். அதைக் காலையில் அரைத்து முகம், கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவிட வேண்டும். பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி வாரம் இரண்டு மூன்று முறை செய்தால் வறண்ட சருமம் நார்மலாகிவிடும்.
    பொதுவாக ஃபேஸ் பேக் போடும்போது கண், கண்களைச் சுற்றிய இடங்களைத் தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் கண்களைச் சுற்றியுள்ள தோல் இறுக்கமாகிவிடும். இவற்றைத் தவிர வறண்ட சருமத்திற்குச் சில பழங்களும் பயன்படுகின்றது. அவற்றைப் பற்றி கீழே பார்க்கலாம்.
    வறண்ட சருமத்திற்குப் பயன்படும் பழங்கள்:
    சாதாரணமாக நாம் சாப்பிடும் மஞ்சள் வாழைப்பழத்தை நன்றாகக் கூழாக்க வேண்டும். இதில் பொட்டாசியம் சத்து அதிகம் இருக்கிறது. இத்துடன் தேன் கலந்து முகத்திலும், கழுத்திலும் பேக் போடவேண்டும். வெறும் அரை வாழைப்பழத்திற்கு 2 டீ ஸ்பூன் தேன் சேர்ப்பது போதுமானது. இந்த பேக்கை 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைத்துப் பின் முகம் கழுவினால் சருமத்திற்கு நல்ல நரிஷ்மெண்ட் கிடைக்கும்.
    'அவகாடோ' என்று ஒரு பழம் இருக்கிறது. பெரிய கடைகளில் கிடைக்கும். இதை பட்டர் ஃப்ரூட் என்போம். இதன் விலையும் மலிவுதான். வெளியில் பச்சை நிறமாகவும் உள்ளே வெண்ணெய் போலவும் இருக்கும். இந்த வெண்ணெய் மாதிரி இருக்கும் கூழை எடுத்து முகத்தில் தேய்த்துக் கழுவவும். இந்தப் பழதை உபயோகித்துத்தான் அழகு நிலையங்களில் ஸ்பெஷல் ஃபேஷியல் செய்யப்படுகிறது. இது உலர் சருமத்திற்கு மிகவும் உகந்தது.
    பேரீச்சம்பழம், பாதாம் பருப்பு இவைகளைக்கூட முகத்தில் தடவ உபயோகிக்கலாம். இவற்றை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். உடனடியாக முகத்திற்குப் போட வேண்டுமென நினைத்தால் வெந்நீரில் ஊறவைக்க வேண்டும். இவற்றை நன்றாக அரைத்துப் பால் அல்லது பால் பவுடர் கலந்து முகத்தில் ஊறவைக்கவும். 15 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை ஊற வைத்துக் கழுவலாம்.
    ஒரு முட்டையை உடைத்துப் பால் சிறிதளவு, ரோஜா ஆயில், அல்லது லாவண்டர் ஆயில் (கடைகளில் கிடைக்கும்) இரண்டு அல்லது மூன்று சொட்டுக்கள் சேர்த்து முகத்தில் தடவவும். பத்து நிமிடம் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவினால் உலர் சருமத்திற்கான ஊட்டச்சத்து முட்டையின் மூலம் கிடைக்கும். முட்டை உபயோகிக்க முடியாதவர்கள் புரொட்டீன் கலந்த பொடியை உபயோகிக்கலாம். லெஸிதின் பவுடர் என்று புரொட்டீன் பவுடர் மருந்துக் கடைகளில் கிடைக்கும். அவற்றில் இரண்டு ஸ்பூன் எடுத்துப் பால் கலந்து முகத்தில் தடவிக் கழுவினால் வறண்ட சருமம் நார்மலாகும். இதை ஒரு நாள்விட்டு ஒரு நாள் செய்து வந்தால் இயற்கையிலேயே அழகாகி விடுவீர்கள். இவற்றில் ரசாயனக்கலவை எதுவும் இல்லாததால் துணிந்து பயன்படுத்தலாம்.
    பொதுவாக உலர் சருமம் உடையவர்கள் குளிர்ந்த நீரில், சாதாரண நீரில் முகம் கழுவுதல் நல்லது. முகத்துக்குப் பேக் போட, காய்ச்சிய பாலைப் பயன்படுத்த வேண்டும்.