அயர்லாந்து என்பது கல்வி தொடர்பான விஷயங்களில் அதிகம் அறியப்பட்ட நாடாகும். மாணவர்கள் பலரும் அயர்லாந்தில் சென்று கல்வி பயில விரும்புகின்றனர்.
சுதந்திர நாடான அயர்லாந்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பிரிட்டன் நிர்வகிக்கிறது. கலாச்சார பெருமை மிக்க அயர்லாந்தின் தலைநகர் டப்லின். கோர்க், வாட்டர்லோர்ட், கால்வே, லிமெரிக், பெல்பாஸ்ட் ஆகியவை அயர்லாந்தின் மிக முக்கிய நகரங்களாகும்.
இங்கு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் உள்ளன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டிற்கு விமான சேவைகளும் உள்ளன.
இந்தியாவைப் போல அயர்லாந்தும் விவசாய நாடாகும். தானியங்கள், உருளைக் கிழங்கு, காய்கறிகள், பழங்கள் இங்கு முக்கிய விளைபொருட்கள். தற்போது தொழில்துறையிலும் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது அயர்லாந்து. உணவுப் பொருள் தயாரிப்பு, உலோகம், ஆடைகள், ரசாயனம் போன்ற தொழில்துறைகள் வளர்ந்து வருகின்றன.
டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர் காலமாகும். பிறகு சாதாரண வெப்பநிலையே நிலவும். ஜுலை, ஆகஸ்ட் மாதங்கள் கோடை மாதமாகும்.
வெளிநாட்டுக் கல்வியை படிக்க விரும்பும் மாணவர்களின் கவனத்தில் அயர்லாந்தும் இடம்பிடித்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,00,000 வெளிநாட்டு மாணவர்கள் அயர்லாந்தில் படிக்கின்றனர். இந்தியாவில் இருந்து அயர்லாந்து செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
பள்ளிப் படிப்பில் முதல் நிலை 8 ஆண்டுகளும், இரண்டாவது மேல்நிலைப் படிப்பு 5 முதல் 6 ஆண்டுகளும், அதன்பிறகு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் சேரும் வகையில் அயர்லாந்து கல்வி முறை அமைந்துள்ளது.
செப்டம்பர் முதல் ஜுன் வரை கல்வி ஆண்டாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் மற்றும் கிறிஸ்துமசிற்கு விடுமுறை அளிக்கப்படும். நம் நாட்டில் நடப்பது போல் ஒவ்வொரு ஆண்டும் இறுதித் தேர்வுகள் இங்கு நடத்தப்படுவதில்லை. தற்போது உலகத் தரத்திற்கு இங்கு பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு பெரும்பாலும் அரசுப் பள்ளிகள்தான் செயல்படுகின்றன. ஒன்றிரண்டு தனியார் பள்ளிகளே உள்ளன. அயர்லாந்து மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் என்பதேக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் ஆங்கிலம், ஐரிஷ், கணிதம் அல்லது கலை, அறிவியில், கைத்தொழில் பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம்.
கல்விக் கட்டணம், தங்கும் இடம், இதர செலவுகள் ஆகியவை, இடத்திற்கு இடம், பாடத்திற்குப் பாடம், கல்வி நிறுவனத்திற்கு நிறுவனம் வேறுபடும்.
அடிப்படை வகுப்புகள்
உயர் கல்வி அளிக்கும் கல்வி நிலையங்கள் பலவும், வெளிநாட்டு மாணவர்களுக்கு அடிப்படை வகுப்புகளை நடத்துகின்றன. இந்த வகுப்பில் தேர்ச்சி அடைந்துவிட்டால், நேரடியாக உயர் கல்வி வகுப்புகளில் சேர்ந்து விடலாம்.
கல்வி நிலையங்கள்
டப்ளின் பல்கலைக்கழகம்
தேசிய அயர்லாந்து பல்கலைக்கழகம்
லிமெரிக் பல்கலைக்கழகம்
டப்ளின் நகரப் பல்கலைக்கழகம்
குயின்ஸ் யூனிவர்சிட்டி ஆப் பெல்பாஸ்ட்
அல்ஸ்டர் பல்கலைக்கழகம் என பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
நாடு முழுவதும் சுமார் 14 தொழிற்கல்வி நிலையங்கள் (ஐ.டி.) உள்ளன.
எப்படி விண்ணப்பிப்பது
அயர்லாந்தில் உள்ள எந்த கல்வி நிலையத்தில், என்ன படிப்பு படிப்பது என்று முதலில் முடிவு செய்து விடுங்கள். பிறகு அந்த கல்வி நிலையத்தில் நீங்கள் சேருவதற்குத் தேவையான சான்றிதழ்கள், பத்திரங்கள், விசா, தங்கும் இடம், தேவையான பணம் ஆகியவற்றை தயார் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் கல்வி பயில விரும்பும் கல்வி நிலையத்தின் மூலமாகவோ அல்லது மத்திய விண்ணப்ப அலுவலகத்தின் மூலமாகவே விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
இங்கு உயர் கல்வியை மூன்றாம் தரக் கல்வி என்று கூறுகிறார்கள். இரண்டாம் தரக் கல்வியில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் அல்லது வெளிநாட்டு மாணவராக இருப்பின், அந்நாட்டின் மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை அளித்துத்தான் உயர் வகுப்பில் சேர முடியும். அயர்லாந்தில் உயர்கல்வி பெற நினைக்கும் மாணவர்கள், ஆங்கில மொழித் திறன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
கல்விக் கட்டணம் (ஒரு ஆண்டுக்கு)
மருத்துவம் - ரூ.16,00,000 முதல் 23,00,000 வரை
பொறியியல், பி.டெக்., - 6,00,000 முதல் 11,00,000 வரை
பட்டயப் படிப்புகள் - 6,00,000 முதல் 9,00,000 வரை
சட்டம் - 6,00,000 முதல் 8,00,000 வரை
கலை பட்டப்படிப்பு - 6,00,000 முதல் 9,00,000 வரை
தங்கும் வசதி
பல கல்வி நிலையங்கள், மாணவர்களுக்கு தங்கும் வசதியை செய்து கொடுக்கிறது. இதுமட்டுமல்லாமல், மாணவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொள்கின்றனர். ஒரு சில குடும்பங்கள், மாணவர்களை தங்களது வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதிக்கின்றனர். அதற்காக மாணவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொள்கின்றனர். அதுபோன்ற வசதி அயர்லாந்தின் பல இடங்களில் உள்ளது.
விசா நடைமுறைகள்
அயர்லாந்தில் விசா பெறுவது என்பது, அயர்லாந்திற்குள் நுழைவதற்கு தகுதி பெறுவதாகாது. அயர்லாந்திற்குள் நுழைவதற்கான முன் அனுமதியை மட்டுமே இது தருகிறது. விசாவுடன் நீங்கள் குடியேற்றத் துறை அதிகாரியை சந்திக்க வேண்டும். நீங்கள் அயர்லாந்திற்குள் நுழையலாமா, கூடாதா என்பதை குடியேற்றத் துறை அதிகாரிதான் தீர்மானிப்பார். அதேப்போல, இத்தனை நாட்கள் தங்கலாம் என்று விசாவில் குறிப்பிட்டிருந்தாலும், குடியேற்றத் துறை அதிகாரிதான், நீங்கள் அயர்லாந்தில் எத்தனை காலம் தங்கலாம் என்பதை முடிவு செய்வார்.
அயர்லாந்து சட்டப்படி, அந்நாட்டில் நிரந்தரமாகத் தங்குவதற்கு எந்த விசா முறையும் இல்லை. 3 மாதத்திற்கு மேல் அயர்லாந்தில் தங்கி கல்வி பயிலும் மாணவர்கள், அருகில் உள்ள காவல்நிலையத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
விசா நடைமுறைகள் முடிந்து, உங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, விசா கிடைக்க 6 முதல் 8 வாரங்கள் வரை பிடிக்கும்.
புதுடெல்லியில் உள்ள அயர்லாந்து தூதரகத்தில், விசாவிற்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம். விசா கட்டணம் ரூ.3,600 ஆகும்.
அயர்லாந்து விசா சேவை மையங்கள்
இந்தியாவில், டெல்லி, சண்டிகர், ஜலந்தர், சென்னை, கொச்சின், ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ளன.
சென்னை முகவரி
சிம்பொனி பேலஸ்,
744/450, பி.எச். ரோடு,
கீழ்பாக்கம், சென்னை - 10.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8. முதல் 3.00 மணி வரை இந்த விசா சேவை மையம் செயல்படும். 1.00 மணி முதல் 1.30 மணி வரை மதிய உணவு இடைவேளை.
புதுடெல்லியில் உள்ள அயர்லாந்து தூதரக முகவரி
230, ஜோர் பாக், புதுடெல்லி - 110 003
தொலைபேசி - +91 11 24626733
விசா தொலைபேசி - +91 11 24629135