• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Tuesday, April 26, 2011

    சம்பாதித்துக் கொண்டே பொறியியல் கல்லூரியில் படிக்க முடியுமா?

     'ப்ளஸ் டூ முடித்திருக்கும் நான், பொருளாதார சூழல் காரணமாக பொறியியல் படிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறேன்.
    'லேட்டரல் என்ட்ரி மூலம், பாலிடெக்னிக் முடித்து, ஒரு வேலைக்குச் சென்று சுயமாக சம்பாதித்து, பிறகு, பொறியியல் கல்லூரி கனவை நிறைவேற்றிக்கொள்’ என்று என் ஆசிரியை ஆலோசனை சொல்கிறார். இது சாத்தியமா..?'' என்று கேட்டிருக்கும் பர்கூர், காயத்ரிதேவிக்கு, விளக்கம் தருகிறார்... திருச்சி, துவாக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் காமாட்சி.

    ''உங்கள் ஆசிரியை சொல்வது அருமையான யோசனைதான். பத்தாம் வகுப்புக்குப் பின்னர் மூன்று வருட பட்டய படிப்பாக பாலிடெக்னிக் கல்வி மேற்கொள்ளப்படுகிறது. ப்ளஸ் டூ முடித்தவர்கள், லேட்டரல் என்ட்ரி மூலம் இரண்டாம் ஆண்டில் நேரடியாகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தமிழகத்தில் அரசின் சார்பில் முப்பது, தனியார்களிடம் நானூறுக்கும் மேல் என்ற எண்ணிக்கையில் பாலிடெக்னிக் கல்லூரிகளும் இருக்கின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய, அதேசமயம் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு அரசு நிறுவனங்கள்தான் சிறப்பான தேர்வு. ஏனெனில், அங்கே பயில கல்விக் கட்டணம் ஏதும் இல்லை. மதிப்பெண்கள், அரசின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி, கவுன்சிலிங்கில் சேர்க்கை முடிவாகும்.
    சென்னை, கோவை, மதுரை, எட்டையபுரம் போன்ற ஊர்களில் செயல்படும் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மகளிருக்கேயான சிறப்பு பாடப்பிரிவுகளையும் கூடுதல் வசதியாக தேர்வு செய்து கொள்ள முடியும். அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகளைப் பொறுத்தவரை மேற்படிப்பை மேற்கொள்வோர் தவிர, அனைவருமே வளாக நேர்காணலில் தனியார் துறை பணிகளைப் பெற்றுவிடுகிறார்கள். அரசு துறைகளிலும் தேர்வுகள் மூலமாக வேலைவாய்ப்பு அவ்வப்போது கிடைக்கிறது. அரசு மற்றும் வங்கி உதவிகளோடு சுயதொழில் மேற்கொள்வோரும் உண்டு.
    வேலைக்கு செல்வோரில் உங்களைப் போன்ற மேற்படிப்பு ஆர்வமுள்ளவர்கள் சுயசம்பாத்தியத்தில் பி.இ. படிப்பையும் மேற்கொள்ளலாம். டிப்ளமோ முடித்து பணியிலிருப்பவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள மாலை நேர படிப்பாக மூன்று வருடத்தில் பி.இ. முடிக்க அரசு வழி செய்துள்ளது. இதற் காக அண்ணா பல்கலைக்கழகம் தனது வளாகங்களில் பி.இ. படிப்பை வழங்குகிறது!''
    - அவள் விகடன் 08-ஏப்ரல் -2011