• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 24, 2011

    சம்பங்கி சாகுபடி - விவசாயி அனுபவம்

    ரகம் - கிழக்கு வீரிய ரகம். பயிரிடும் நிலத்தின் அளவு - தோராயமாக 30 சென்ட். உழவு முறை - வாரம் ஒரு உழவு போட்டு 15 நாட்களுக்கு நிலத்தை ஆறவைக்க, மீண்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை விதமாக 2 உழவு போடவேண்டும்.
    நன்கு ஆறிய பின் 8 யூனிட் அளவு (4 டிராக்டர்) நன்கு மக்கிய சாணமாக இடவேண்டும். இதை 15 நாட்களுக்கு ஆறவிட வேண்டும். பின் அதை நிலத்தில் நன்கு இறைத்துவிட வேண்டும். இறைத்த பின் ஒரு உழவு விட்டுவிட வேண்டும். கிழங்கின் அளவு 30 சென்ட், 10 மூடை.
    விதை நேர்த்தி: கிழங்கு வாங்கிக்கொண்டு வந்து வேப்பமரத்தின் நிழலில் உலரவைக்க வேண்டும். உலரவைத்த கிழங்கை 3 நாட்களுக்கு 3 முறையாக கை பார்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் அருகம்புல் வேர் கோரைக்கிழங்கு மற்ற களைகள் அந்த கிழங்கிலிருந்து முற்றிலும் அகற்றப்படும்.
    பார் அமைக்கும் முறை: சிறிய சிறிய வாய்க்கால்கள் எடுத்து கால் அடி வீதத்தில் மூன்று எட்டுக்கு ஒரு நிறை வீதமாக மூன்று பாத்திகளாக அமைக்க வேண்டும். ராஜா வாய்க்கால் கரை 2 அடியில் அமைக்க வேண்டும். பாத்தி அரை அடிக்கு ஒரு கரை வீதமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
    கிழங்கு நடவுமுறை: ஒரு அடிக்கு ஒரு இடத்தில் மூன்று, நான்கு கிழங்கை அடிப்பாகம் பூமிக்குள்ளும் மேல்பாகம் பூமிக்கு மேல்நோக்கி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
    நீர்ப்பாசனம்: கிழங்கு நட்ட பிறகு உடனே நீர் பாய்ச்ச வேண்டும். மண்ணின் தன்மையை பொறுத்து கரிசல் மண்ணாக இருந்தால் 5 நாட்களுக்கு ஒரு முறையும் செவல் மண்ணாக இருந்தால் 3 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். நான்காவது முறை தண்ணீர் பாய்ச்சியபிறகு களை தோன்ற ஆரம்பிக்கும்.
    களை நிர்வாகம்: சூழ்நிலைக்கேற்றவாறு 10-15 நாட்களுக்கு ஒரு களை எடுக்க வேண்டும். 30-40 நாட்களில் கிழங்கு முளைப்புத்திறன் வந்துவிடும். களைகள் வந்து கிழங்கினை பாதிக்காதவாறு களைகளை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    வளர்ப்பு முறை: நட்ட 60 நாட்களில் 5-10 செ.மீ. வரை கிழங்கு வளர்ந்துவிடும். நன்கு வளர்ந்தபின் 10-15 செ.மீ. வந்தபின் இயற்கை வேளாண்மை உரம் இடவேண்டும்.
    மேலுரம்: இயற்கை வேளாண்மை உரத்தை 30 சென்டுக்கு 1 மூடை வீதமாக எடுத்து ஒரு டிரம்மில் போட்டு தண்ணீர் கலக்கி, நீர் பாய்ச்சும்போது ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் செடி நன்றாக வளர்ந்து கரும்பச்சை நிறத்தில் இருக்கும். பரவலாக அரும்புகள் தோன்றி பூக்கள் வர ஆரம்பிக்கும்.
    உரம் இடும் முறை: இயற்கை வேளாண்மை உரத்தை 30 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரில் கலந்து செடிகளுக்கு விடவேண்டும். நன்றாக தண்ணீர் பாயக்கூடிய நிலத்திற்கு மட்டும் பொருந்தும். இவ்வாறு நடவு செய்து களை இல்லாமல் இருக்கும் நிலத்திற்கு நோய் தாக்கும் அபாயம் இல்லை.
    பயிர் பாதுகாப்பு அறை: 30 நாட்களுக்கு ஒரு முறை 3 லிட்டர் மாட்டு கோமியம், அரைலிட்டர் ஆறியவடிகஞ்சி, பால் 300 மில்லி, மஞ்சள்தூள்-300 கிராம் கலந்து பவர் ஸ்பிரேயர் மூலம் தெளிக்க வேண்டும். இயற்கை உரத்தை பயன்படுத்த இயற்கை முறையில் சாகுபடி செய்தோமானால் பூ நன்றாகவும் பருமனாகவும் இருக்கும். நல்ல மகசூல் கிடைக்கும். நல்ல விலையும் கிடைக்கும்.
    அறுவடை: எல்லா மாதங்களிலும் வரும்.
    வாழ்நாள்: 5, 6 வருடம் வரை இருக்கும்.
    தொடர்புக்கு: சவடமுத்து, அலவாச்சிபட்டி, திண்டுக்கல். 98436 32040.
    -கே.சத்தியபிரபா, உடுமலை.