உடல் எடையைக் குறைப்பது உடல் ஆராக்கியத்துக்கும், தோற்றத்துக்கும் மட்டுமின்றி மூளையின் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.உடல் எடையைக் கணிசமான அளவு குறைப்பது என்பது ஞாபக சக்தி மற்றும் ஒரு விடயத்தில் தீவிரக் கவனம் செலுத்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கென 150 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் எல்லோரும் 21 கல்(ஒரு கல்=11 இறாத்தால்) எடைக்கு மேல் கொண்டவர்கள். ஆரோக்கியமான மக்களோடு இவர்கள் ஒப்பிடப்பட்டனர். இதில் எடை கூடியவர்களுள் கால்வாசிப் பேர் ஞாபக சக்தி சோதனையில் மிகக் குறைவான புள்ளிகளையே பெற்றனர்.
கற்றல், ஆற்றல் குறைவானவர்களை ஒத்ததாகவே இவர்களின் ஞாபக சக்தி ஆற்றல் அமைந்திருந்தது. இவர்களுள் பலருக்கு மேலதிக சுகாதாரப் பிரச்சினையும் காணப்பட்டது.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உறக்கமின்மை என்பன இந்த சுகாதாரப் பிரச்சினைகளுள் சிலவாகும். ஆரம்பக் கட்ட சோதனைகளின் பின் ஆய்வில் பங்கேற்றவர்களுள் மூன்றில் இரண்டு பங்கினர் வாயுக் கோளாறுக்கான சத்திர சிகிச்சை செய்து கொண்டு தமது தொப்பையின் அளவைக் குறைத்துக் கொண்டனர்.
மேலும் இவர்கள் கணிசமான அளவு எடையையும் குறைத்துக் கொண்டனர். 12 வாரங்களின் பின் இவர்கள் ஞாபக சக்தி உட்பட இன்னும் பல ஆற்றலில் முன்னரிலும் பார்க்க சிறந்து காணப்பட்டனர்.
ஆனால் இந்த ஆய்வில் கலந்து கொண்ட பின்னரும் எடை குறைப்பில் எந்த ஆர்வமும் காட்டாதவர்களின் நிலை தொடர்ந்து மோசமடைந்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. |