மைக்கிறேன் என்ற தலைவலி, அதோடு கூட வரும் அசதி என்பவற்றுக்கான காரணம் இன்று வரை தெரியமல் இருந்து வந்தது.இதற்காக சில வகை மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தாலும் மைக்கிறேன் ஒற்றைத் தலைவலியை வைத்திய உலகம் வெற்றி பெற முடியாமலே இருந்து வந்தது. டென்மார்க்கில் சுமார் அரை மில்லியன் மக்கள் இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்போது டென்மார்க்கின் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் இருவர் இந்நோய்க்கான முக்கிய காரணத்தை கண்டுபிடித்துள்ளனர். மைக்கிறேன் சுகயீனத்தின் பிரதான டி.என்.ஏ கோட் இவர்களால் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
டென்மார்க் கொலஸ்ரொப் வைத்தியசாலை வைத்தியர்களான ஸாகில் அஸார் மற்றும் மசூட் அசினா ஆகிய இரு வைத்தியர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த நோய்க்கான பிரதான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எம்.ஆர் ஸ்கேனர் மூலம் மேற்கொண்ட பல்லாயிரக்கணக்கான மணி நேர ஆய்வுகளின் பின்னர் இரத்தக் குழாய்கள் இதயத்திற்கு இரத்தத்தை இழுக்கும் போது ஏற்படும் தடையே இந்த நோய்க்கு பிரதான காரணமாக இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.
இந்த நோய் வருவதற்கான காரணம் குறித்த விபரமான கட்டுரை அனலாஸ் ஒப் நியூரோலஜி என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. மைக்கிறேன் தலைவலியை உடனடியாகக் குணப்படுத்தும் புதிய மாத்திரைகள் சந்தைக்கு விரைவில் வருகின்றன என்றும் இச்செய்தி தெரிவிக்கிறது. |