![](http://new.vikatan.com/doctor/2011/02/15/images/p38.jpg)
ஆம்... நமக்கு என்ன பிரச்னை என்பது தெரியாமல் இருக்கும் 'அறியாமை’யும் ஒரு நோய்தான். அதைத் தெரிந்துகொண்டு நோயைப் புரிந்துகொள்வதே பாதி குணம் ஆகிவிட்டதற்குச் சமம்.
அப்படிச் சில புதிரான மனக் குழப்ப நோய்களை இங்கே அடையாளம் காட்டுகிறார்கள் பிரபல மருத்துவர்கள்.
சங்கீதா மது (மனநலம் மற்றும் குழந்தைகள் சிறப்பு உளவியல் நிபுணர்):
''இன்றைய குழந்தைகள் மிக வேகமாக பாதிக்கப்படக்கூடிய ஒரு விஷயம் 'சைல்ட் டிப்ரெஷன்.’ 'அந்த டீச்சரைப் பிடிக்கலை. என் ஃப்ரெண்ட் பேச மாட்டேங்கிறா...’ எனத் தொட்டதுக்கெல்லாம் குழந்தை புகார் சொன்னால், உடனே கவனிக்க வேண்டும். இல்லாவிடில், குழந்தைகள் சோர்ந்து, உற்சாகம் இழந்து, எதிலுமே பிடிப்பு இல்லாமல் முடங்கிவிடுவார்கள்.
காலையில் எழுந்ததுமே சில குழந்தைகள், 'அம்மா... தலை வலிக்குது. வயிறு வலிக்குது’ என்று அடம் பண்ணும். உடனே, 'ஐயோ வலியா! ஓடு டாக்டரிடம்’ என்று சில பெற்றோர் பதறு வார்கள். இன்னும் சிலர், 'ஓஹோ, ஸ்கூலுக்கு மட்டம் போடப் பார்க்கிறியா?’ என்று இரண்டு தட்டுத் தட்டி குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பி வைப்பார்கள். இரண்டுமே சரியல்ல! குழந்தையைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்து அக்கறையோடு கேட்க வேண்டும். மருந்து மாத்திரைகளைவிட, அன்பும் ஆதரவும்தான் குழந்தைகளின் டிப்ரெஷன்களுக்கு நல்ல மருந்து.''
டாக்டர் விருதகிரிநாதன் (நரம்பியல் மற்றும் உளவியல் நிபுணர்):
![](http://new.vikatan.com/doctor/2011/02/15/images/p38a.jpg)
இதை நோய் என்பதைவிட, கருவில் இருந்தே உருவாகும் குறைபாடு என்று சொல்லலாம். இதைச் சரிப்படுத்துவது கடினமல்ல. ஆனால், எவ்வளவு வேகமாகக் கண்டுபிடித்துச் சரி செய்கிறோமோ, அவ்வளவுக்கு குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லது.
கண்டுபிடிப்பதும் சுலபம்தான். 'ஏ,பி,சி,டி' என்று ரிதமாகச் சொல்லி விடுவார்கள். அதையே நிறுத்தி நிதானமாகச் சொல்லச்சொன்னால், தடுமாறுவார்கள். சில குழந்தைகள் எழுதும்போது நடுநடுவே சில எழுத்துக்களை அடிக்கடி விட்டுவிடுவார்கள். இப்படி சின்னச் சின்ன டெஸ்ட்டுகள் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
அன்பும், ஆதரவும், கொஞ்சம் கண்டிப்பான அணுகுமுறையும் இருந்தால், எளிதில் இதைச் சரி செய்துவிட முடியும்!''
டாக்டர் யமுனா (வளர் இளம் பருவச் சிறப்பு மருத்துவர்)
''விடலைப் பருவத்தைக் கடக்கும் (அநேகமாக பூப்படையும் சமயம்) குழந்தைகள் சந்திக்கும் மனக் குழப்பங்கள் ரொம்பவே அதிகம்.
9 வயதில் இருந்து 18 வயதுக்குள் உடலில் நடக்கும் மாற்றங்கள்தான் இதற்குக் காரணம். பொதுவாக, 10 வயதில் இருந்து 14 வயதுக்குள் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும். ஆண் குழந்தைகளுக்கு விந்து உற்பத்தியாகி, வெளியேறத் தொடங்கும்.
![](http://new.vikatan.com/doctor/2011/02/15/images/p39.jpg)
இந்தச் சமயத்தில், பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆணும் சரி, பெண்ணும் சரி தனிமையைத் தேடுவார்கள். குடும்பத்தில் இருந்து விலகி தனித்தன்மையுடன் வளர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பெற்றோரின் அறிவுரையைக் கேட்பதையே அவமானம் போல நினைக்கும் குழந்தைகளும் உண்டு. தொட்டதற்கெல்லாம் கோபம் வரக்கூடிய பருவம் இது.
உடலியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னரே, அதாவது, 10 வயதிலேயே, பெற்றோர்கள் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அந்த வயதில் ஏற்படக்கூடிய மாறுதல்கள் இயற்கையானவை என்று சொல்லித் தயார்ப்படுத்தினால் குழந்தைகளின் மனக் குழப்பங்களுக்குத் தடை போடலாம்!''
டாக்டர் நாராயணரெட்டி (செக்ஸாலஜிஸ்ட்):
''இதுதான் நாகரிகம், இதுதான் சுதந்திரம் என்று ஏடாகூடமாக டான்ஸ், டிஸ்கொதே, பார்ட்டி, கிளப் என இளைஞர்களும், பெண்களும் திசை மாறிக்கொண்டு இருப்பது வெளியே பார்ப்பதற்கு வேண்டுமானால் ஜாலியான விஷயமாகத் தெரியலாம். இப்படிச் சுற்றியவர்கள் பலருக்கு இன்று டீ.பி.டி. (Disfunctional Personality Trait) என்கிற ஒருவகை மன நோய் இருக்கிறது என்பதுதான் உண்மை.
எப்போதும் தன்னை ஆராதிக்கும், ரசிக்கும் ஆணோ பெண்ணோ தன் அருகிலேயே இருக்க வேண்டும் என்று நினைக் கிற மனப்பான்மையோடு, ஆடம்பரமாக வாழ வேண்டும் என்கிற ஆசையும் சேர்வதால் உண்டாகும் பாதிப்புதான் இந்த மன நோய். இந்த நோய் தாக்கப் பட்டவர்கள் தன்னுடன் பழகும் ஆண்களையும்கூட முழுமையாக நேசிக்கவோ, நம்பவோ மாட் டார்கள். இத்தகைய பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக மனநல மருத்துவரின் உதவியைப் பெறுவது முக்கியம்!''
![](http://new.vikatan.com/doctor/2011/02/15/images/p40.jpg)
''வீட்டைப் பூட்டிவிட்டோமா என்று நூறு முறைக்கு மேலாகப் பூட்டை இழுத்துப் பார்க்கிறீர்களா? முகம் அழுக்காக இருக்கிறது என்று மணிக்கு ஒரு தரம் சோப்புப் போட்டுக் கழுவிக்கொண்டே இருக்கிறீர்களா? அருவருப்பான எண்ணங்களோ, உருவமோ திரும்பத் திரும்ப மனதுக்குள் வந்து தொல்லை தருகிறதா? இந்த மாதிரியான பல கேள்விகளுக்கெல்லாம் 'ஆம்’ என்பதே உங்கள் பதிலாக இருந்தால்... எச்சரிக்கை! ஓ.சி.டீ (Obsessive Compulsive Disorder) என்கிற மனநோய் உங்களைத் தாக்கி யிருக்கலாம்.
இந்தியாவில் மட்டும் சுமார் 2 கோடிப் பேர் இந்த நோயினால் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலும், 20-லிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்களையே இந்நோய் பெரும்பாலும் தாக்கு கிறது. மனவருத்தம், தேவையற்ற பயம், குடிப்பழக்கம் போன்றவை இதன் மூல காரணங்கள்.
இந்த நோயின் அடிப்படைக் காரணம், மூளையில் உள்ள செரட்டோனின் (Seratonin) என்கிற ரசாயனப் பொருளில் ஏற்படும் மாற்றம்தான். ஓ.சி.டீ. தாக்குவதற்கு மரபியல் ரீதியிலான காரணங்களும் மிக முக்கியமாகவே இருக்கின்றன. ஆரம்பநிலையிலேயே கவனித்துவிட்டால் உடனே கவுன்சிலிங் மூலமும், மாத்திரைகள் மூலமும் குணப்படுத்திவிடலாம். தற்கொலை முயற்சி போன்ற விபரீதங்கள் இல்லை என்றாலும் ஒருவருடைய வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கிப் போட்டுவிடும் இந்த மனநோய்!
- பா.ராஜநாராயணன், டி.அருள்எழிலன்