• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, March 3, 2011

    விடாது துரத்தும் சைனஸ்... தப்பிக்க என்ன வழி ?

    ''நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தின் சீதோஷ்ணம், வருடா வருடம் என்னை படுத்தி எடுத்து விடுகிறது. 38 வயதாகும் எனக்கு சைனஸால் தலைவலி, தலைபாரம், சளி, தும்மல் என இந்த மாதங்களில் தொந்தரவுகள் நீள்கின்றன. நிரந்தரத் தீர்வுக்கு வழி ஏதும் இருக்கிறதா?''

     டாக்டர் ந.கிருபானந்த், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், செங்கல்பட்டு:
    ''மூளையின் எடையை பேலன்ஸ் செய்ய, தகவமைப்பாக முகத்தில்  காற்று அறைகள் இருக்கின்றன. இவை, சைனஸ் அறைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சைனஸ் காற்றறைகள் ஒவ்வாமையினால் தொற்றுக்கு உள்ளாகும்போது அழற்சிஅடைவதுதான் 'சைனஸைடிஸ்’ நோயாக அறியப்படுகிறது.
    சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தனிப்பட்ட மனித உடல் இயல்பினாலோ உடலுக்கு ஒவ்வாமை ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம்அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒரு வகை நீரை சுரக்க ஆரம்பிக்கின்றன. எதிர்ப்புச் சக்தி குறைவால் நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். உப உபத்திரவமாக தும்மல், தலைவலி, தலைபாரம் போன்றவையும் தோன்றும். இந்த நிலை வரை எழும் தொந்தரவுகள் சைனஸைடிஸ் வரையறைக்குட்பட்டவை. இதே தொந்தரவுகள் தொடர்ந்து நீடிக்கும்போது, அது ஆஸ்துமாவாக உருவாகலாம்.
    உடலின் ஒவ்வாமைக்கு தனிப்பட்ட மற்றும் பொதுவான காரணிகள் ஏராளமாக இருக்கின்றன. ஒருவருக்குக் குறிப்பிட்ட பதார்த்தம் ஒவ்வாமையைத் தரலாம். மேற்படி உணவைத் தவிர்ப்பதன் மூலம் அவர் நிவாரணம் பெற முடியும். ஆனால், மழை, பனி போன்ற சீதோஷ்ண மாறுதல்கள் ஒருவரின் ஒவ்வாமை இயல்பை அதிகரிக்கும்போது சமாளிப்பது சற்று சிரமம்தான். உதாரணமாக, காற்றில் பரவும் மாசுகளை மழையும் பனியும் ஈர்த்து, நம் சுவாசப்பரப்பிலேயே நிலைநிறுத்துகின்றன. கூடவே, இந்தக் காலங்களில் பூச்செடி, மரங்கள் என்று அதிகரிக்கும் மகரந்தச் சேர்க்கையும் சைனஸைத் தூண்டும். இந்தப் பொதுக் காரணங்களை தவிர்க்க முடியாது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஓரளவு பாதுகாப்பு பெறலாம்.
    சைனஸைடிஸை எதிர்கொள்ள மருத்துவ சிகிச்சைகளை விட, லைஃப் ஸ்டைல் ஒழுங்குகளே நல்ல ரிசல்ட் தரும். தூய பருத்தி ஆடைகள், கம்பளி ஆடையெனில் அவை தூசு இல்லாதிருப்பது, பூக்கள், தூசுக்கள் சூழலைத் தவிர்ப்பது, மாஸ்க் அல்லது கர்ச்சீஃப் உபயோகிப்பது என ஆயத்தமாக இருக்கலாம். பனி, மழை காலங்களில் பாக்டீரியா தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளதால் உடல் எதிர்ப்பு சக்தி சீர்குலையாதிருக்க ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
    சைனஸ் அறைகளின் ஆரம்பகால பாதிப்புக்கு சாதாரண ஆன்டிபயாடிக் மருந்துகள் போதுமானது. இறுகியும், மஞ்சள் நிறத்திலும் சளி இருக்குமானால் மருத்துவ ஆலோசனையுடன் கூடுதல் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது மாத்திரை வடிவில் கிடைக்கும் மருந்துகளை கொண்டு 'வேது’ பிடிப்பது பக்கவிளைவுகளற்ற சிறப்பான வழி. நாள்பட்ட சைனஸ் பாதிப்பு, காற்றறை சுவரை தடிப்பாக்கி, அதன் வாயை அடைக்க முற்படும். இதற்கு எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம் பெறலாம். போதிய கவனிப்பு, சிகிச்சைகளின்றி இந்த பிரச்னை ஆஸ்துமாவாக உருவெடுக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் இருக்கட்டும்!''