ஆண்டுக்கு ஆண்டு புதிது புதிதாக கோர்ஸ்கள் வந்தாலும், பல மாணவிகளின் குடும்பப் பொருளாதாரம், 'ப்ளஸ் டூ-வுக்குப் பின்?’ என்ற கேள்விக்குறியைத் தந்து, அவர்களின் வேகத்தைத் தடுத்துவிடுவதுதான் வேதனை. அதுபோன்ற வர்களைக் கை தூக்கிவிடுவதற்காகவே, சென்னை, முகப்பேரில் இயங்கிக் கொண்டிருக்கிறது 'அப்பேரல் எக்ஸ்போர்ட் புரொமோஷன் கவுன்சில்' (AEPC -Apparel Export Promotion Council)என்பது ஆச்சர்ய செய்திதானே!
![](http://new.vikatan.com/aval/2011/02/25/images/avl72b.jpg)
''பத்தாம் வப்பு, ப்ளஸ் டூ, டிகிரி முடித்த பெண்களுக்கு இங்கு அப்பேரல் பேட்டர்ன் மேக்கிங், புரொடக்ஷன் சூப்பர்விஷன் அண்ட் குவாலிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட ஆறு மாத கோர்ஸ்களையும், அப்பேரல் மேனுஃபேக்சர் டெக்னாலஜி, ஃபேஷன் டிசைனிங் உள்ளிட்ட ஒரு வருட, இரண்டு வருட கோர்ஸ்களையும் வழங்கிறோம். ஆடை வடிவமைப்பு பற்றிய இந்தப் படிப்புகளுக்கு பிரகாசமான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன! இதற்கு வயது வரம்பு ஒரு தடையே இல்லை. கல்லூரி மாணவிகள் துவங்கி குடும்ப பெண்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்தப் படிப்பை படிக்கலாம்'' என்று உற்சாகத்தோடு சொல்கிறார் அதன் பொறுப்பாளர் ஸ்ரீவித்யா.
''இது வெறும் டெய்லரிங் கோர்ஸ் மட்டுமில்ல. அதுல இருக்கற எல்லா அட்வான்ஸ்டு லெவல்களையும், அப்டேட்களையும் எங்களுக்குச் சொல்லித் தர்றதால படிச்சுட்டு இருக்கும்போதே எங்களால பல பிரமாண்ட பேட்டர்ன்களை உருவாக்க முடியுது. பார்ட்டி வேர், கேஷ§வல் வேர், சில்ட்ரன் வேர், டிரெண்ட் சுடி, பிளவுஸ், வெட்டிங் கலெக்ஷன்ஸ், டிராமா டிரெஸ்னு எல்லா ஏரியாவுலயும் எங்க கிரியேட்டிவிட்டியை கொட்டிக் கலக்கறோம்!'' என்று அங்கே பயிலும் ஹஸ்ரின் சொல்ல, உடன் பயிலும் கீர்த்திகாவும் பானுப்ரியாவும் ஆர்வமாக அவர்கள் வடிவமைத்த ஆடைகளை நம்மிடம் காட்டுகிறார்கள்.
''எம்ப்ராய்டரி, ஸ்டோன்ஸ், ஃப்ளவர் வொர்க், சமிக்கி வொர்க், குந்தன் வொர்க், ஜர்தோஸி, ஸ்கிரீன் பிரின்ட்டிங்னு எல்லாமே இங்க சொல்லிக் கொடுக்கறாங்க. படிச்சுட்டு இருக்கும்போதே பக்கத்து வீடுகள்ல சேலைக்கு எம்ப்ராய்டரி, குழந்தைங்களுக்கு பார்ட்டி வேர், டிராமா டிரெஸ்னு வொர்க் செஞ்சு கொடுத்தேன். இப்போ பக்கத்து தெரு, பக்கத்து ஏரியாவுல இருந்து எல்லாம் ஆர்டர்கள் குவிய ஆரம்பிச்சுடுச்சு'' என்று சந்தோஷம் பகிர்கிறார் லட்சுமி.
![](http://new.vikatan.com/aval/2011/02/25/images/avl72c.jpg)
இங்க படிச்ச எங்க சீனியர்ஸ் எல்லாம் வொர்க்ஷாப், கார்மென்ட்ஸ், ஃபேஷன் டிசைனிங்னு பல தளங்கள்லயும் கலக்கிட்டு இருக்கறதும், ஆயிரங்கள அள்ளிட்டு இருக்கறதும் நம்பிக்கையைக் கொடுக்குது!'' என்று நெகிழ்ந்தார்கள் மற்ற தோழிகள்!
![](http://new.vikatan.com/aval/2011/02/25/images/avl72a.jpg)
''ஐந்தாம் வகுப்புவரை படித்தவர்களுக்கும் இந்த வாய்ப்பு இருக்கிறது! 'ஸ்மார்ட்’ என்ற பெயரில் 'ஷார்ட் டைம்’ கோர்ஸ்கள் கற்பிக்கப்படுகின்றன. ஐந்தாம் வகுப்பு வரை படித்திருப்பதே இதற்கான தகுதி. ஸ்மார்ட் ஆபரேட்டர், ஸ்மார்ட் ஃபினிஷர்ஸ் அண்டு பேக்கர்ஸ், ஸ்மார்ட் மெஷின் டெக்னீஷியன், ஸ்மார்ட் சர்ஃபேஸ் ஆர்னமென்டேஷன் டெக்னிக்ஸ், ஸ்மார்ட் ஹெல்பர்ஸ் ஃபார் புரொடக்ஷன் அலைடு வேலைகள் என்று அசத்தலாம்.
இதுமட்டுமா... எட்டாம் வகுப்பு படித்தவர்கள் 'ஸ்மார்ட் செக்கர்’, பத்தாம் வகுப்பு படித்தவர்கள் 'ஸ்மார்ட் பேட்டர்ன் மேக்கர்’, 'ஸ்மார்ட் மெஷின் டெக்னிஷியன்’, ப்ளஸ் டூ படித்தவர்கள் 'ஸ்மார்ட் சூப்பர்வைசர்’, 'ஸ்மார்ட் ரீடெய்ல் சேல்ஸ் அசோஸியேட்’, 'ஸ்மார்ட் குவாலிட்டி கன்ட்ரோலர்’ என வாய்ப்புகள் விரிந்து கிடைக்கின்றன!'' என்று விவரித்த ஸ்ரீவித்யா...
''வாங்க... படிங்க... ஜெயிங்க!'' என்று அட்வான்ஸ் வாழ்த்துக்களோடு அழைக்கிறார்!