'ஹெல்த் செக்கப் அவசியம்’ -சமீபகாலமாக இந்த வலியுறுத்தல் அதிகமாகக் கேட்கிறது. அதே நேரம் 'ஹெல்த் செக்கப்புக்கு பணம் அதிகம் தேவைப்படும். வியாதியே இல்லாதபோது எதற்கு ஹெல்த் செக்கப்?’ என்கிற பொறுமல்களுக்கும் குறைவு இல்லை.
ஹெல்த் செக்கப் அவசியமா... இல்லையா..? ஹைடெக் டயக்னோஸ்டிக் சென்டரின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ்.பி.கணேசன் பதில் சொல்கிறார்.

''எதிலுமே வரும்முன் காப்பதுதான் நல்லது. ஒரு நோயை, வருவதற்கு முன் தடுப்பதன் மூலம் மருத்துவச் செலவுகளை வெகுவாகக் குறைக்க முடியும். நோயின் தீவிரத்தையும் உடலின் துன்பத்தையும் தவிர்க்க முடியும். அதற்கு குறிப்பிட்ட இடைவெளியில் ஹெல்த் செக்கப் செய்வது மிகமிக அவசியம்!'' என வலியுறுத்திய கணேசன் எதுபோன்ற நோய்களுக்குப் பரிசோதனை அவசியம் என்பதையும் விளக்கினார்.
''எந்த நோயையும் ஆரம்பத்திலேயே நாம் அறிந்துகொள்வது அவசியம். 35 முதல் 40 வயதான ஆண்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்புக்கான அறிகுறி உள்ளிட்டவற்றை அறிந்துகொள்வது அவசியம். மதுப்பழக்கம் இருந்தால் ஈரல் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இந்தச் சோதனைகளை தேவையின் அடிப்படையில் தனித்தனியாக செய்துகொள்ளலாம். முழு உடல் பரிசோதனை மூலம் அனைத்து நோய் பாதிப்புகளுக்குமான அறிகுறிகளை அறிந்துகொள்வதும் நலம். முழு உடல் பரிசோதனைக்கு சுமார்

1500 செலவாகும். மதுப் பழக்கத்தால் உண்டான ஈரல் பாதிப்பு குறித்து அறிய மேற்கொள்ளப்படும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு

500 செலவாகும். தேவையின் அடிப்படையில் பரிசோதனை செய்வதன் மூலம் செலவைக் குறைக்கலாம்!'' என்றவர் பெண்களுக்கான பரிசோதனைகள் குறித்தும் சொன்னார்.
''பெண்களிடத்தில் நோய் பரிசோதனை மேற்கொள்வதில் விழிப்பு உணர்வு குறைவாக இருக்கிறது. அவர்களின் இயற்கை குணமே, உடல் கஷ்டத்தை தாங்கிக்கொள்வதாக இருக்கிறது. சிலர், உடல் பாதிப்புகளை வெளியில் சொல்ல வெட்கப்படுகிறார்கள். இந்த மனநிலை பெரிய அளவிலான பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். ஆண்களைவிட பெண்களுக்கு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல் நோய்களின் எண்ணிக்கையும் அதிகம். மார்பகம், கர்ப்பப்பை வாய் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கிறது. சுமார் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முழு உடல் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் ஆண்டுக்கு புதிதாக 2.5 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், 1.5 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் தாக்குகிறது. மார்பகம், கர்ப்பப்பை உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோயை முதல் மற்றும் இரண்டாம் நிலையில் கண்டுபிடித்துவிட்டால் முழுமையாகக் குணமாக்க முடியும். அடுத்த நிலையில் கட்டுப்படுத்தத்தான் முடியும்.
இந்தப் புற்றுநோய்களைக் கண்டறியும் சோதனைக்கு

1000 செலவாகும். இதை முழு உடல் பரிசோதனையுடன் செய்யும்போது

2000 மட்டுமே வாங்கப்படுகிறது. தேவையைப் பொறுத்து தனியாகவோ, கூட்டாகவோ செய்துகொள்ளலாம். மேலும், மாத விலக்கு நின்றுபோன, சர்க்கரை வியாதி உள்ள 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு எலும்பு தேய்மான பாதிப்பு இருக்கிறது. இதுபோன்ற பெண்களுக்கு லேசாக அடிபட்டாலும் எலும்பு முறியும் அபாயம் இருக்கிறது. அதனால் பரிசோதனை செய்து எலும்பு பலத்தை அதிகரித்துக்கொள்வது அவசியம்!'' என்றவர், 'யாருக்கு ஹெல்த் செக்கப் தேவையில்லை’ என்பதையும் விளக்கினார்.
''12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பொதுவாக முழு உடல் பரிசோதனை தேவை இல்லை. அது நல்லதும் இல்லை. கதிர் வீச்சு பாதிப்பு அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட நோய் இருந்தால் மட்டும் பரிசோதனை செய்துகொண்டால் போதும். நோய் பாதிப்புக்கான குறிப்பிட்ட வரையறைக்குள் இருந்தால் ஆண்டுதோறும் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொண்டால் போதும். குறிப்பிட்ட நோய் இருந்தால் அதற்கான பரிசோதனையை மட்டும் தனியே செய்துகொண்டால் போதும். நோய் வராமல் தடுக்க, வந்த பிறகு பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க சரியான உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் இருந்தாலே போதும். பொருள் இழப்பையும், கால இழப்பையும் தவிர்க்க முடியும்!''