கண் சிகிச்சையில் புதிய டெக்னிக்..
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள திருமதுரையைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. அவர் மகள் ஆனந்தி நான்கு வயதாக இருந்த நேரத்தில், பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு சிறுவன் வைத்த வெடி சிதறிவந்து ஆனந்தியின் கண்ணில் படவே, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கண்ணில் படுகாயம் ஏற்பட்ட காரணத்தால், ஆனந்தியின் வலது கண் பார்வை பறிபோய்விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
'ஆனந்தியின் கதி அவ்வளவுதானா’ என்று நினைத்து மனவருத்தம் அடைந்து முடங்கிப் போகாத அவளது பெற்றோர், சென்னையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனைக்குக் கொண்டுவந்தனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர் அமர் அகர்வால் தலைமையிலான மருத்துவக் குழுவினர், கருவிழியில் உள்ள லென்ஸில் பாதிப்பு இருப்பதை கண்டறிந்து, க்ளூட் ஐ.ஓ.எல். அறுவைசிகிச்சை செய்தது. ஆனந்திக்கு மீண்டும் பார்வை கிடைத்துவிட்டது.
இந்த புதிய அறுவை சிகிச்சை பற்றி டாக்டர் அமர் அகர்வால் நம்மிடம் பேசினார்.
''விபத்து காரணமாக கண்ணில் படுகாயம் ஏற்படும்போது கண்ணுக்குள் இருக்கும் லென்ஸை தாங்கிப் பிடிக்கும் கேப்ஸ்யூல் (பை போன்ற அமைப்பு) சிதைந்துவிடுகிறது. மார்ஃபன் சின்ட்ரோம், வெய்ல் மர்ச்சஷானி சின்ட்ரோம் போன்ற குறைபாடு உள்பட ஒருசில நோய்கள் காரணமாகவும், இந்த லென்ஸ் கேப்ஸ்யூல் வலுவிழந்து விடுகிறது. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு கண்ணுக்குள் லென்ஸ் வைக்க முடியாது. அப்படியே வைத்தாலும், அது கண்ணுக்குள் விழுந்துவிடும். அதனால், இவர்கள் கண்ணுக்கு வெளியேதான் லென்ஸ் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. அதாவது, மிகத் தடிமனான கண்ணாடியை (சோடா பாட்டில் அளவு தடிமன்) அணிவார்கள். இதைத் தவிர்க்க க்ளூட் ஐ.ஓ.எல். என்ற புதிய யுக்தியை நாங்கள் கண்டுபிடித்தோம்.
தற்போது அந்த சிகிச்சை மேலும் நவீனமாகி விட்டது. அதனால் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு கண் புரைக்காக அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்களும், தடிமான கண்ணாடி அணிந்து இருப்பவர்களும் இந்த அறுவைசிகிச்சை செய்து குணமடைய முடியும்.
இந்த அறுவைசிகிச்சை வழக்கமான கண் புரை அறுவை சிகிச்சை போன்றதுதான். ஆனால், இதில் நாங்கள் கடைப்பிடிக்கும் டெக்னிக்தான் புதியது. உலகம் முழுவதும் இந்த சிகிச்சை
முன்பு, கேப்ஸ்யூல் இல்லாதவர்களுக்கு கண்ணுக்குள் லென்ஸ் பொருத்தியபோது சரியாகப் பொருந்தாமல் பார்வையில் பிரச்னை ஏற்படுத்தியது. தையல் போடுவதால் லென்ஸ் நகருவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்த புதிய நுட்பத்தால் இந்தப் பிரச்னை இல்லை. பார்வைத் திறனும் நன்றாக இருக்கும். இந்த சிகிச்சையை மேலும் மேம்படுத்திக்கொண்டே இருக்கிறோம். மடிக்கக் கூடிய தன்மை கொண்ட லென்ஸ் பயன்படுத்தும்போது, கண்ணில் எங்குமே தையல் போடாமல் முழுவதும் பசையைக் கொண்டே ஒட்டிவிடுகிறோம். இந்த அறுவைசிகிச்சையை அதிகபட்சம் 15 நிமிடத்தில் முடித்துவிடுவோம். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. அன்றைக்கே வீட்டுக்குச் சென்று விடலாம், அடுத்த நாளில் இருந்து தங்கள் பணியைத் தொடரலாம்!'' என்றார் அமர் அகர்வால்.