"என் கணவரின் பெற்றோர் இருவருமே சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள். 38 வயதாகும் எனது கணவர் இரண்டு மாதங்களுக்கு முன் பாதங்கள் உணர்வின்றி இருப்பதாகக் கூறவே, சர்க்கரை நோய் மருத்துவரிடம் சென்றோம்.
பரிசோதனைகளுக்குப் பிறகு, சர்க்கரை நோய் பாதிப்பு இல்லையென்று டாக்டர் சொல்லிவிட்டார். எனினும் அவ்வப்போது வறட்சி, பசி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்று சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாகக் கூறி பயப்படுகிறார். சர்க்கரை நோய் இருந்து, அது பரிசோதனைகளில் தெரியாமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறதா? பொதுவாக, சர்க்கரை நோய் பாதிப்பில்லாதவர்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?"
டாக்டர் வி.பி. கண்ணன், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர், தஞ்சாவூர்:
![](http://new.vikatan.com/doctor/2011/03/18/images/av32a%281%29.jpg)
உங்கள் கணவரின் வயது சர்க்கரை நோயை வரவேற்க சித்தமாகும் வயது. ஆனால், பரிசோதனையில் சர்க்கரை நோய் இல்லை என்று வந்த பிறகும் அவர் அச்சத்திலேயே இருப்பது, நல்லதல்ல. அவர் கூறும் அறிகுறிகளும் அவர் அச்சத்தின் வெளிப்பாடாகவே இருக்கலாம். பொதுவாக, உடலைத் தொற்றும் வியாதிகள் மெடிக்கல் டெஸ்ட்டுகளுக்கு பிடிகொள்ளாது தப்பித்து விடும். காலரா, டைபாய்டு, எய்ட்ஸ் உள்ளிட்ட வைரஸ் தாக்கும் நோய்களில் இதற்கு வாய்ப்புண்டு. இவையும்கூட அடுத்தடுத்த டெஸ்ட்டுகளில் அடையாளம் காணப்பட்டு விடும். ஆனால், சர்க்கரை நோய் ஆரம்ப நிலையிலேயே மருத்துவப் பரிசோதனைகளில் கண்டிப்பாக அடையாளம் காணப்பட்டுவிடும். எனவே, உங்கள் கணவர் கொண்டுள்ள பயம் அநாவசியமானதுதான். 'ஏதாவது ஒரு நோய் தனக்கு வந்துவிடுமோ?' என்ற அச்சத்திலேயே இருப்பவர்களை 'ஹைபோ கோண்ட்ரியாஸிஸ்' (HypoChondriasis) என்போம். இது நீடித்தால், அதுவே மனநல பாதிப்பாக மாறிவிடும். எனவே, கவனம் தேவை.
சாதாரணமான நிலையில் உள்ளவர்கள்... ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை செய்தாலே போதுமானது. நாற்பது வயதுக்குமேல் உள்ளவர்கள் இருமுறை மேற்கொள்வது நல்லது."