• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, March 20, 2011

    எதற்கெல்லாம் மெடிக்ளைம் கிடைக்கும்?

    மெடிக்ளைம் பாலிசி எடுத்துவிட்டாலே உடம்புக்கு எந்தப் பாதிப்பு வந்தாலும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள் பலரும்.
    விளைவு, ஏதாவது பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு கிளைம் செய்தால், பணம் மறுக்கப்படுகிறது. அப்போது, 'மெடிக்ளைம் பாலிசி எடுப்பது வீண்’ என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். ஏஜென்டுகளும் எந்தெந்த நோய்களுக்கு இழப்பீடு கிடைக்காது என்ற விவரத்தை பாலிசி எடுக்கும் போது சொல்வதில்லை. இதுபோன்ற நிலையைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும்? நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு மேலாளர் மனோகரன் பேசுகிறார்...
    ''மெடிக்ளைம் பாலிசியைப் பொறுத்த வரையில் பிறவிக் குறைபாடுகளுக்கு எப்போதும் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாது. கண்புரை, குடல் இறக்கம் போன்றவைகளுக்குப் பாலிசி எடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்தும், நீரிழிவு, இதயக் கோளாறுகளுக்கு நான்கு ஆண்டுகள் கழித்தும் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். பிறவிக் கோளாறு மற்றும் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு இடையேயான வித்தியாசம் தெரியாமல்தான் பலரும் தடுமாறுகிறார்கள். பிறவிக் கோளாறு என்பது பிறக்கும் போதே இருப்பது. உதாரணத்துக்கு பிறவி ரத்தசோகை, முதுகெலும்பு பிளவு போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஏற்கெனவே இருக்கும் நோய் என்பது இடையில் ஏற்பட்டு பாலிசி எடுக்கும்போதும் இருப்பதாகும். உதாரணத்துக்கு ஒருவருக்கு பாலிசி எடுக்கும்போது நீரிழிவு நோய் இருக்கும்பட்சத்தில், அவர் பாலிசி எடுத்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டால் கிளைம் கிடைக்கும்!'' என்ற மனோகரன், எதுபோன்ற நிலையில் செலவு செய்த தொகை கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதையும் விளக்கினார். 
    ''சில அறிகுறிகளின் அடிப்படையில் நோய் இருக்கிறதா என்று அறிவதற்குப் பலரும் பரிசோதனை செய்துகொள்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில், நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே கிளைம் கிடைக்கும். மற்றபடி பரிசோதனை முடிவில் நோய் எதுவும் இல்லை என்றால் கிளைம் இல்லை. அதேபோல் நோய் பாதிப்பால் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு இருக்கும் பாதிப்பு பிறவிக் குறைபாடு என்று தெரியவந்தால் இழப்பீடு மறுக்கப்படும்!'' என்றார்.
    அதே நேரத்தில்,  வழக்கமாக ஒருவர் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறார். அந்தச் சோதனைகளில் அவருக்கு ஏற்கெனவே இருக்கும் நோய் பற்றி எதுவும் தெரியவரவில்லை. ஆனால், திடீர் பாதிப்பின் காரணமாக அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலை வந்தால், அதற்கான செலவை காப்பீடு நிறுவனம் கொடுக்கவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல் ஒருவர், அவருக்கு இதற்கு முன் வந்த மாரடைப்பை ஜீரணக் கோளாறினால் ஏற்பட்ட நெஞ்சு வலி என்று தவறாகப் புரிந்துகொண்டிருந்தால், அதற்கான கிளைம் கொடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற சமயங்களில் காப்பீடு நிறுவனங்களில் போராடித்தான் இழப்பீடு பெற வேண்டி இருக்கும்.       
    அதேபோல் பாலிசி எடுக்கும்போது 'மது குடிக்கமாட்டேன்; சிகரெட் பிடிக்கமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு அதற்கு மாறாக செயல்பட்டு, கல்லீரல் பாதிப்பு நுரையீரல், தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டால் கிளைம் கிடைப்பது கஷ்டம்!
    பாலிசி எடுக்கும்போதே தவறான பழக்கங்கள்  இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில் (பிரீமியம் அதிகமாக வசூலிக்கப்பட்டிருக்கும்) பாதிப்புகளுக்கு கிளைம் கிடைக்கும்.