ஜப்பானில் ஃபுகுஷிமா பகுதியில் மட்டுமே அணுக் கதிர்வீச்சினால் மக்களுக்கு உடல்நலப் பாதிப்பு அபாயம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
அண்மையில் ஏற்பட்ட சுனாமித் தாக்குதலின் தொடர்ச்சியாக, வடகிழக்கு ஜப்பானின் ஃபுகுஷிமாவில் உள்ள அணு உலைகள் சேதமடைந்தன. இதனால், அணுக் கதிர்வீச்சு பரவி மக்களின் உடல்நலத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, ஃபுகுஷிமாவில் அணு உலைகள் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி 20 கிலோ மீட்டருக்கு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அத்துடன், 30 கிலோ மீட்ட சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கப்பட்டனர்.
இவ்வேளையில், ஃபுகுஷிமாவில் இருந்து வெளியேறும் அணுக்கதிர் வீச்சால் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் ஆபத்து ஏற்படும் எனக் கருதப்பட்டு, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஃபுகுஷிமாவில் அணு உலைகள் அமைந்துள்ள இடத்தின் சுற்றுவட்டாரத்தில் மட்டுமே அணுக் கதிர்வீச்சு பாதிப்பு இருக்கும் என்றும், ஏனைய ஆசிய நாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் வராது என அறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமை காலை அறிவித்தது.