மனித உறுப்புகளை தானம் செய்வது தொடர்பான விதிமுறைகளை எளிமையாக்க வகை செய்யும் 'மனித உறுப்புகள் மாற்று' சட்டத் திருத்ததுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
![](http://new.vikatan.com/doctor/2011/03/18/images/uruppu.jpg)
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், "மனித உறுப்புகளை தானம் செய்வது தொடர்பான விதிமுறைகளை ஒழுங்குபடுத்தவும், எளிமையாக்குவதற்கும் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு நோயாளிக்கு உறுப்பு தானம் செய்ய தகுதிபெற்ற ரத்த சம்பந்தமுள்ள உறவினர்கள் பட்டியலில் தாத்தா, பாட்டியும் சேர்க்கப்படுகிறார்கள்.
சட்டரீதியாக எடுக்கப்பட்ட இதயம், சிறுநீரகம் ஆகியவற்றை எடுத்துச் செல்வது தொடர்பாக, இந்த சட்ட திருத்தத்தில் சிறப்புப் பிரிவுகள் சேர்க்கப்படும்.
சட்டவிரோதமாக மனித உறுப்புகளை திருடுவோருக்கு தண்டனை அதிகரிக்கப்படுகிறது. அவர்களுக்கு அபராதம் உயர்த்தப்படுவதுடன், சிறைத் தண்டனையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மருத்துவரீதியாக பொருத்தமற்ற உறவினர்களுக்கிடையே, உறுப்புகளை மாற்றிக் கொள்வதை சட்டப்பூர்வமாக்க இந்த சட்டதிருத்தம் வகை செய்கிறது. உறுப்பு மாற்றத்துக்காக, ரத்த சம்பந்த உறவினர்கள், இனிமேல் எந்த பரிசோதனைக்கும் உட்பட வேண்டியது இல்லை. அவர்கள், தங்கள் பிறப்பு சான்றிதழை அளித்தாலே போதுமானது. மனித உறுப்பு திருட்டை கட்டுப்படுத்த இந்த சட்டதிருத்தம் உதவும்," என்றார் அமைச்சர்.