• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, March 20, 2011

    யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்..

    ''மாதவிலக்கு நேரத்தில் பயன் படுத்துகிற துணி, நாப்கின்கள் மற்றும் 'டாம்பூன்ஸ்' (Tampoons) பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் நசீரா சாதிக்..

    மாதவிலக்கின்போது துணியைப் பயன்படுத்துவது நல்லதல்ல. ஒவ்வொரு முறையும் ஒரே துணியையே துவைத்து பயன்படுத்துவதால், அது சுகாதாரக் கேடுதான். மேலும், மீண்டும் மீண்டும் உபயோகிப்பதால் துணி கடினமாகி விடும். இது தொடை மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளில் உராய்ந்து அந்த இடங்களில் சிராய்ப்பையும் கருமையையும் ஏற்படுத்தும்.
    துணியையே பயன்படுத்திப் பழகியவர்கள், அதை சோப்பு போட்டு நன்றாகத் துவைத்து, நுரை எங்கும் தங்கிவிடாமல் நன்றாக அலசிய பிறகு வெயிலில் உலர்த்த வேண்டும். டிடர்ஜென்ட் போட்டு துவைக்கும்போது குறைந்தது ஆறு முறையாவது நல்ல தண்ணீரில் அலச வேண்டும். துணியை டெட்டால் கலந்த தண்ணீரில் அலசுவது மிகத் தவறு.
    துணியை சரியாக துவைக்கவில்லையெனில், அதில் உள்ள அழுக்கும், சரியாக அலசாமல் விட்டால் சோப்பும் பிறப்புறுப்பில் தங்கி அரிப்பை ஏற்படுத்தும். துணியை நிழலில் உலர்த்தினால் கிருமிகள் உருவாகி, பிறப்புறுப்பில் நோய்த்தொற்றை உண்டாக்கலாம்.
    ஒவ்வொரு முறை நாப்கின் அல்லது துணியை மாற்றும்போதும், பிறப்புறப்பை நன்றாக சுத்தம் செய்த பிறகே மாற்ற வேண்டும்.
    நல்ல தரமான சானிடரி நாப்கின்களையே பயன்படுத்த வேண்டும். தரமற்ற நாப்கின்களால் பிறப்புறுப்பில் இன்ஃபெக்ஷன் ஏற்படவும் அந்த இடம் செப்டிக் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது.
    நார்மலாக நாம் பயன்படுத்தும் நாப்கின்கள் 'காட்டன் ஹைபோ அலர்ஜினிக்' (cotton hypo alergenic) எனப்படுகிற அலர்ஜி மற்றும் தீங்கு தராத மெட்டீரியலால் ஆனவை. நாப்கின்களை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று முறை மாற்றி விடுவது நல்லது. ரத்தப்போக்கு மிகவும் குறைவாக இருந்தால்கூட, இரவு தூங்கப் போகும் முன் கட்டாயம் நாப்கினை மாற்ற வேண்டும். இல்லையெனில் ரத்தப்போக்கு நாப்கினின் மேல்புறம் தங்கி, அதில் கிருமிகள் உருவாகி, நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
    'டாம்பூன்ஸ்' என்பது மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் வகைகளில் ஒன்று. இதைப் பிறப்புறுப்பின் உள்ளே வைத்துக் கொள்ளலாம். தண்ணீரை உறிஞ்சும் தன்மையுடைய குச்சி போன்ற அமைப்பில் இது இருக்கும். இதன் அடியில் சிறிய நூல் இருக்கும்.
    டாம்பூன்ஸை திருமணமான பெண்கள் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், திருமணமாகாத பெண்கள் இதைப் பயன்படுத்துவது அத்தனை நல்லதல்ல.
    ரத்தப்போக்கின் அளவு நார்மலாக இருந்தால் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். அதிக அளவு ரத்தப்போக்கு இருந்தாலோ, ரத்தப்போக்கு கட்டி கட்டியாக இருந்தாலோ டாம்பூன்ஸை பயன்படுத்த முடியாது. காரணம், ஒரு குறிப்பிட்ட அளவு ஈரப்பதத்தை மட்டும்தான் இது உறிஞ்சும்.
    ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு முறையாவது டாம்பூன்ஸை கட்டாயம் மாற்றி விட வேண்டும். அது உடலுக்குள் நீண்ட நேரம் இருந்தால், ரத்தப்போக்கு உள்ளுக்குள்ளேயே தங்கி 'டாக்ஸிக் ஷாக் ஸிண்ட்ரோம்' (Toxic shock syndrome) எனப்படுகிற இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தி விடலாம். நாளடைவில் இதனால் கர்ப்பப்பையும் பிறப்புறுப்பும் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு அந்த இடம் முழுவதுமே செப்டிக் ஆகிவிடவும் வாய்ப்பு இருப்பதால், ரத்தப்போக்கு மிகக் குறைவாக இருந்தாலும்கூட குறிப்பிட்ட இடைவெளிகளில் மாற்றியே தீர வேண்டும்.''