''வாங்க தம்பி... இப்பத்தான் பிஸியோதெரபி பயிற்சி முடிஞ்சுச்சு. நீங்களும் வர்றீங்க. அந்தக் காலத்துலேருந்து இன்னிய தேதி வரைக்கும், நான் இப்படித்தான்...
ஷூட்டிங் ஸ்பாட்டுல சொன்ன நேரத்துக்கு நிப்பேன். யாரையும் காக்க வைச்சிடக் கூடாதுங்கிறதில் ரொம்ப கவனமா இருப்பேன்!''
![](http://new.vikatan.com/sakthi/2011/03/08/images/p13.jpg)
சர்ச்சை, சங்கடம் என சினிமா உலகுக்கே உரிய உளைச்சல்கள் துரத்தும்போதெல்லாம் ஒற்றை உதறலில் அவற்றைக் கடந்து விட்டு மனம் பூரிக்கச் சிரிப்பது ஆச்சியின் வழக்கம். ''எங்கே கற்றீர்கள் இந்த வாழ்வியல் மந்திரத்தை?'' எனக் கேட்டால், கலகலவெனச் சிரிக்கிறார்.
''ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பு இருக்காதுன்னு ஒரு பாட்டு இருக்கே. அது எத்தனை சத்தியம் தெரியுங்களா? நம்மோட வேலையே ஆடுறதும் பாடறதும்தான்னு ஆயிருச்சு. நாம ஆசைப்பட்ட வேலையே நமக்குக் கிடைக்கறதுங்கறது, நம்மளுக்கு பாதி ஆரோக்கியத்தைக் கொடுத்துரும். மீதி ஆரோக்கியத்தை நாம வாழற வாழ்க்கையும் சாப்பிடற உணவும்தான் தீர்மானிக்கும்.
சின்ன வயசுலேருந்தே... அதாவது பள்ளத்தூர்ல இருக்கும்போதிருந்தே உணவு விஷயத்துல ரொம்பவே சிக்கனம். ஏன்னா... சின்ன வயசுல வறுமை; அதனால வகைதொகை தெரியாம சாப்பிடறதுங்கறதே இல்லாமப் போச்சு. அந்த வறுமைதான், பின்னாடி காசு பணம் சேர்ந்த போதும், மிதமான சாப்பாடு, ஆரோக்கியமான வாழ்க்கைங்கறதை செயல்படுத்தறதுக்குக் காரணமாச்சு!
'நானும் ஒரு பெண்’ விழாவை சிம்பிளா ஸ்டூடியோல நடத்தினார் ஏவி.மெய்யப்பச் செட்டியார் ஐயா. எல்லாருக்கும் பந்தி நடந்துச்சு. அப்ப செட்டியார் ஐயா சாப்பிட்டு முடிச்ச இலையைப் பார்த்தா... அவ்வளவு சுத்தமா இருந்துச்சு. பரிமாறுபவர்கள்கிட்ட, 'கொஞ்சமாப் போடுங்கப்பா, வேணும்னா கேட்டு வாங்கிக்கறேன்’னு சொல்லிட்டுத்தான் சாப்பிடவே உக்காருவாராம், செட்டியார் ஐயா. அட... இது நல்லாருக்கேன்னு வியந்து, அதுக்கு அப்புறம் நானும் அதைக் கடைப்பிடிக்கத் துவங்கினேன். வயிறு முட்டச் சாப்பிட்டு, பாத்திரத்தைக் காலி பண்ணிட்டு, ஏப்பம் விட்டா... அப்புறம் பாத்திரத்தோட ஒன்றி எப்படி நடிக்க முடியும்? எங்கனா, ஓரமா, கட்டையைச் சாய்ச்சா தேவலைன்னுதானே தோணும்?!'' என்றவர் சிரிப்பும் சிலிர்ப்புமாய்த் தொடர்ந்தார்.
![](http://new.vikatan.com/sakthi/2011/03/08/images/p14.jpg)
![](http://new.vikatan.com/sakthi/2011/03/08/images/p15.gif)
அடுத்ததா, யோகா கத்துக்கிட்டேன். மனசுல எத்தனை பாரம் இருந்தாலும், அதெல்லாம் சட்டுன்னு விலகிரும். 'அட... சோலையாண்டவர் இருக்கான், பாரத்தை அவன்கிட்ட விட்ருவோம்’னு சட்டுன்னு நம்பிக்கை வந்துரும்! அப்படி, மனசுல சோகம்னா, திருவேற்காடு கருமாரியம்மனைத் தரிசனம் பண்ணிட்டு வந்துருவேன். அவ, என்னை பெத்தெடுக்காத இன்னொரு அம்மா!
என்னைப் பொறுத்தவரைக்கும், இன்றைய என்னோட ஆரோக்கியத்துக்கு, என்னைப் பெத்த அம்மாதான் முக்கியக் காரணம். நல்ல சாப்பாட்டையும் அளவுக்கு அதிகமான அன்பையும் சேர்த்துச் சேர்த்துக் கொடுத்து வளர்த்த, சாமி அவங்க! 'வெளிநாட்டுக்குப் போனா, அங்கே நம்மூர் இட்லி, தோசையைத் தேடாதே. அங்கே அந்த நாட்டுக்காரங்க சாப்பிடறதையே நீயும் சாப்பிடு. அந்த நாட்ல இருக்கறவரைக்கும், அந்த உணவைச் சாப்பிட்டாத்தான், உனக்கு உடம்புக்கு எதுவும் வராது!’ன்னு அறிவுரை சொன்ன, என் செல்ல மருத்துவச்சி, அவங்க!
![](http://new.vikatan.com/sakthi/2011/03/08/images/p15a.jpg)
'முன்ன மாதிரி நீ டான்ஸ்லாம் ஆடமுடியாது. ஏன்னா, நீ பாட்டியாயிட்டே. ஆனா, நிக்கலாம், ஸ்டைலா நடக்கலாம், ஓடலாம், கொஞ்சம் மேக்கப் போட்டா, தில்லானா மோகனாம்பாள் ஜில்ஜில் ரமாமணியாட்டம் இருப்பே!’ன்னு கிண்டல் பண்றான், என் பேரன், ராஜராஜன். அவரு... ஆர்த்தோ டாக்டர்.
'ஒயிட்டா இருக்கற விஷயங்களை கவனமா, குறைச்சலா சேர்த்துக்கிட்டா, பிரைட்டா இருக்கலாம், பாட்டி’ன்னு டிப்ஸ் கொடுக்கறா பேத்தி அபிராமி. என்னன்னு கேட்டா... சாதம், பால், உப்பு, சர்க்கரைன்னு தவிர்க்க வேண்டியதை மளிகைக் கடை லிஸ்ட் மாதிரி பட்டியல் போடுறா!
எனக்குக் கிடைக்காத படிப்பு, அவங்களுக்குக் கிடைச்சிருக்கு. என்னைப் போலவே அவங்களுக்கும், ஆரோக்கியமா வாழ்றதுக்கான வழிகள் தெரிஞ்சிருக்கு. போதாக்குறைக்கு, அன்பை அள்ளித்தர மனசோட வாழ்ந்துக்கிட்டிருக்கேன்; ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களோட, அன்பும் எனக்குக் கிடைச்சிருக்கு. அளவான உணவும் அளவற்ற அன்பும் இருந்துட்டா... அங்கே ஆரோக்கியத்துக்கு ஒருகுறையும் இல்லீங்களே!'' நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகச் சொல்கிறார் ஆச்சி!