நீரின் பண்புகளும் அதன் குணங்களும் மாறும் தன்மை உடையவை. அவைகள் நிறமற்றவை, சுவையற்றவை என்று வர்ணிக்கப்பட்டாலும் அவைகள் சூழலுக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டவைகளாக உள்ளன.மழை நீரினால் குளிர்ச்சி, நல்லறிவு முதலியன உண்டாக்கும். பனி நீரினால் வாதகோபம், சொறி சிரங்கு முதலியன குறையும். மேற்கூறியது போக மற்ற நீர்கள் அவையிருக்கும் நிலத்தின் குணத்தைப் பெற்றிருக்கும்.
அதாவது ஆற்று நீர் திரிதோஷத்தால் ஏற்பட்ட நோய்களையும், பித்தகோபத்தையும் மற்றும் தாகத்தையும் தணிக்கும். கிணற்று நீர் அழற்சி, வீக்கம், பித்தம் சுவாசம் முதலியவற்றை நீக்கும்.
ஏரி நீர் வாதத்தை விருத்தி செய்யும். கடல் நீரானது உதரநோய், சுரம் முதலிய நோய்களைப் போக்கும். வெந்நீரை அருந்த அதாவது நன்றாக காய்ச்சி அருந்துமளவு ஆற்றி பருக வேண்டும். காய்ந்து ஆறிய நீரானது ரத்தபித்தம், சுரம், வாந்தி முதலிய நோய்கட்குச் சிறந்தது.
உணவுக்கு முன்பு நீரை அருந்த மந்தத்தையும், உணவுக்கு பின்பு அருந்த சீரணத்தையும், உணவுக்கு இடையிடையே அருந்த பல நோய்களையும் உண்டாக்கும். மேலும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு அதிகமாக நீரை அருந்தக் கூடாது. |