செளம்யா சொல்லும் செளக்ய மந்திரம்
அப்படி ஒருவர்! மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சரின் மனைவி என்பதை அவருடைய ஆரோக்கியமான சிரிப்பே அடையாளப்படுத்துகிறது.
''என் மகள் ப்ளஸ் டூ பரீட்சைக்காகப் படிச்சுட்டு இருப்பதால்தான், வீடு இப்படி நிசப்தமா இருக்கு. இல்லைன்னா, எனக்கும் குழந்தைங்களுக்குமான கொண்டாட்டத்துல வீடே நிறைஞ்சு நிற்கும்!'' - சிறு குழந்தைச் சிரிப்போடு ஆரோக்கிய ரகசியம் தொடர்கிறார் சௌம்யா.
![](http://new.vikatan.com/av/2011/03/16/images/p107.jpg)
காலையில் எழுந்த உடனே வெறும் வயிற்றில் சீரகம் போட்ட தண்ணீரை மிதமான சூட்டில் இரண்டு டம்ளர் குடிப்பேன். சீரகத் தண்ணீருக்கு நம் உடம்பைச் சுத்தம் பண்ணும் சக்தி இருக்கு. அதன் பிறகு, ஒரு பழம் சாப்பிடுவேன். வயிற்றில் அமினோ ஆசிட்ஸ் அதிகமாக இருக்கிற நேரம் அது. அதனால் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் என ஏதாவது ஒரு பழத்தை அந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது'' - உதடுகளுக்கு முன்னரே கண்கள் சிரிக்கத் துவங்கி விடுகின்றன சௌம்யாவுக்கு!
''அரிசி உணவுகள் எங்க வீட்டில் அதிகம் கிடையாது. மதியச் சாப்பாட்டில் காய்கறி, கீரை, கூட்டு ஆகியவற்றுடன் சிறிது அளவே சாதம் இருக்கும். மதியச் சாப்பாட்டை எத்தகைய வரிசையோடு நாம் சாப்பிடணும்கிறதே பலருக்கும் தெரிவதில்லை. முதலில் தண்ணீர் அல்லது மோர் குடிக்கணும். அப்புறம் பழங்களோ, காய்கறிகளோ சாப்பிடணும். அதன் பிறகுதான் சாப்பாடு. கலோரி, கார்போ ஹைட்ரேட் குறைவாக உள்ளவற்றை முதலில் உண்பதால், ஜீரணத்துக்கான சுரப்பிகள் மிதமாகத் தூண்டப்படும். ஆனால், நாமோ தலைகீழ் வரிசையில் முதலில் சாப்பாடு, அப்புறம் கூட்டு, கடைசியாக மோர், தண்ணீர் எனச் சாப்பிடுகிறோம். நம் உள்ளுறுப்புகளைப் பற்றி கவலையேபடாமல், இஷ்டத்துக்குச் சாப்பிடுவதுதான் வியாதிகளுக்கு வாசல்!'' அக்கறை யோடு சொல்லும் சௌம்யா, தவறாமல் தினமும் யோகா பயிற்சி மேற்கொள்கிறார்.
''எல்லாவிதமான உடற்பயிற்சிகளும் எனக்கு அத்துப்படி. டெல்லியில் இருந்தபோது ஒரு மணி நேரம் ஏரோபிக்ஸ் பண்ணுவேன். ஜிம்முக்குப் போவேன். ஆனால், எல்லாவிதமான பயிற்சிகளையும் முடிச்சுட்டு யோகா கற்றுக்கொண்டபோது, அதில் தனி நிறைவு இருந்தது. அர்த்தம் நிறைந்த, அலை வரிசைக்கு ஏற்ற பயிற்சி, யோகா. அதனால், இப்போது தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்கிறேன். நடக்கும்போது என்னுடன் வருபவர் கள் என் வேகத்துக்கு ஈடு கொடுக்கத் திணறுவார் கள். கடகட வேகத்தில் நடப்பேன். வீடு பெருக்குவது தொடங்கி தண்ணீர் இறைப்பது வரை நமக்கான வேலைகளே மிகப் பெரிய பயிற்சிகள்தான்!''
![](http://new.vikatan.com/av/2011/03/16/images/p108.jpg)
''ஆரம்பத்தில் பாலாடையும், நலங்கு மாவும் முகத்துக்குப் பயன்படுத்துவேன். இப்போ ரசாயனக் கலப்பு இல்லாத க்ரீம்களைப் பயன்படுத்துகிறேன். சாப்பாட்டில் தினம் ஒரு கீரை சேர்த்துக்குவேன். என் பார்வையில் ஆரோக்கியம்தான் அழகு. அரிசி தொடங்கி மிளகாய்ப் பொடி வரைக்கும் அய்யா வீட்ல இருந்தே எங்களுக்கு வந்திடும். 'எதுவாக இருந்தாலும் அது அளவோடு’ என்பதுதான் எங்க உணவு விதி!''- விழிகள் விரித்து வியப்புக் காட்டும் சௌம்யாவுக்கு உறக்கம் என்பது வரம்.
''தலையணையில் தலைவைத்த அடுத்த கணமே தூங்கிடுவேன். அந்த விதத்தில், நான் ரொம்பக் கொடுத்துவெச்ச ஆள். 'உனக்கு எங்கே இருந்துதான் இப்படித் தூக்கம் வருது’ன்னு எல்லோரும் ஆச்சர்யமா கேட்பாங்க. எங்க வீட்ல நான் ஒரே மகள். அய்யா வீட்டுக்கு நான் ஒரே மருமகள். இந்த அளவுக்கு கவலையே இல்லாத வாழ்க்கை அமைந்தால், நிம்மதியான உறக்கத்துக்குச் சொல்லணுமா என்ன?''
ஒரு டிப்ஸ்!
![](http://new.vikatan.com/av/2011/03/16/images/p107a.jpg)
ஓர் ஆதங்கம்!
''சென்னை போன்ற பெருநகரங்களில் கண்ணில்படும் குழந்தைகளில் முக்கால்வாசிப் பேர் உடல் பருமனாகக் காட்சி அளிக்கிறார்கள். பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்துவிட்டு, பீட்ஸா மாதிரியான வரவுகளால்தான் இந்த வேதனை. பெற்றோர் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும்!''ஒரு பயிற்சி!
''டெல்லியில் யோகா கற்றுக்கொண்டபோது, 'புல் வாட்டர்’ என்கிற பயிற்சியை மேற்கொள்ளச் சொன் னார்கள். கிணற்றில் இருந்து நீர் எடுக்கும்போது எப்படி நம் உடலை வளைத்து, கைகளை மேலும் கீழுமாக அசைப்போமோ... அதுதான் அந்தப் பயிற்சி! உடனே நான் அந்தப் பயிற்சியாளரிடம், 'எங்க பாட்டி பண்ணச் சொன்னதைத்தானே நீங்க சொல்லிக் கொடுக்குறீங்க’ன்னு கேட்டேன். அவர் சிரிச்சுட்டார். நம் தினப்படி 'லைஃப் ஸ்டைல்’ மூலமே உடலுக்குத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், அதுவே ஆரோக்கியத்துக்கான பாதித் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடும்!''