• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, February 24, 2011

    அறுசுவை உணவும்… அருமருந்தும்…!

    ஆரோக்கியமும், நோயும்… நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே அமைகின்றன. தவறான உணவுகளை உண்ணும்போது அஜீரணம் உண்டாகி, அதனால் உடம்பில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால் உடலில் நச்சுத் தன்மை அதிகரித்து நோய்கள் உடம்பை தாக்குகின்றன.

    பழங்காலத்தில் உணவு உண்ணுவதை ஒரு பூஜை போல் கருதினார்கள். சூரியன் உதயமான பின்னர் ஒருமுறையும், சூரியன் மறைந்த பின்னர் ஒருமுறையும் உணவு சாப்பிட்டனர். இடையில் காபி, டீ மற்றும் நொறுக்குத் தீனிகளை அவர்கள் சாப்பிடவில்லை. பலகாரங்கள், பண்டங்களை ஏதாவது ஒரு பண்டிகையின் போது சமைத்து உண்டார்கள்.
    தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சாப்பிடும் எண்ணைப் பலகாரங்கள் ஜீரணிக்க… தீபாவளி லேகியம் சாப்பிட்டனர். நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிக்காவிட்டால் தான் பல நோய்கள் நமக்கு வருகின்றன.
    நாம் சாப்பிடும் தவறான உணவு முறைகளால்தான் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதைத்தான் வள்ளுவர், உணவின் பெருமைகளையும், தவறான உணவினால் வரும் நோய்களையும் விளக்கமாக கூறியுள்ளார். மேலும் நாம் சாப்பிடும் உணவானது நமது மனச் செயல்பாட்டையும் நிர்ணயிக்கிறது.
    அமைதியான வாழ்க்கைக்கு சாத்வீக குணம் நிறைந்த உணவுகளும், உணர்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கு ரஜோ குணம் நிறைந்த உணவுகளும், அறியாமையில் மூழ்குவதற்கு தமோ குணம் நிறைந்த உணவுகளும் காரணமாகின்றன என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.

    இயற்கையில் நமக்கு இரண்டு நோய்கள் உண்டு. அது பசி, நீர்வேட்கை. இதில் பசியை தணிப்பதற்கு உணவு மருந்தாகவும், நீர் தாகத்தைத் தணிக்கும் மருந்தாக தண்ணீரும் உள்ளன. பழங்காலத்தில் மனிதன் பலவிதமான உணவுகளையும், மாமிசங்களையும் மற்றும் காய்கறி, கனிகளையும் சாப்பிட்டு வாழ்ந்தான் என்றாலும், அவனுடைய உடல் உழைப்பு அனைத்தையும் சமன் செய்தது. இயற்கையைச் சார்ந்தே மனிதனுடைய உணவு அமைந்திருக்கிறது. உடம்பு உயிரைத் தாங்க வேண்டுமெனில் அதற்கு உணவு வேண்டும். இன்றைக்கு உணவு முறைகள் மாறிவிட்டன.
    நமது நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான உணவு வகை இருந்து வருகிறது. வடக்கே கோதுமையை உண்கிறார்கள். சோறு மற்றும் காய்கறிகளையும் சில இடங்களில் சாப்பிடுகின்றனர். மகாராஷ்டிராவில் கோதுமை, சோளம், ராகி, கம்பு இவற்றால் செய்த ரொட்டி, அடை போன்றவை முக்கிய உணவு.
    கர்நாடக மாநிலத்தில் நெல், சோளம், கம்பு, தினை, ராகி, சாமை முதலியவற்றை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் அரிசியும், சோளமும் முக்கிய உணவு என்றாலும் நாம் அரிசியை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம்.
    சிறந்த உணவை சரியான வேளையில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும், மனதில் புத்தி சாமர்த்தியமும், நற்பண்புகளும் உண்டாகின்றன. எந்த நோயும் அணுகாது. ஆயுர்வேதத்தில் உணவுகள் அனைத்தும் அறுசுவையை அடிப்படையாக கொண்டுள்ளன. அறுசுவை பஞ்ச பூதங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது.
    * பிறந்தது முதல் உடலுக்கு இனிப்புச் சுவை ஏற்றதாக இருக்கிறது. பொதுவாக இனிப்புச் சுவை உடலுக்கு பலத்தை அளிக்கும். எலும்புருக்கி நோயாளிகளுக்கு நல்லது. உடலை பருக்கச் செய்யும்.
    * புளிப்புச் சுவை பசியைத் தூண்டும். இருதயத்திற்கு நல்லது. ருசியை உண்டாக்கும். உஷ்ணவீரியம் உடையது.
    * உவர்ப்பு பசியைத் தூண்டும். வேர்வையை உண்டாக்கும். அதிகமாக உப்பை சேர்த்தால் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும்.
    * கசப்புச் சுவை கொழுப்பை வற்ற வைக்கும். மலம், சிறுநீரை குறைக்கும். எளிதில் ஜீரணமாகும். குளிர்ச்சியானது, தொண்டையை சுத்தம் செய்யும்.
    * காரம் தோல்தடிப்பு, வீக்கம், தொண்டை நோய் ஆகியவற்றைப் போக்கும். கொழுப்பை உலரச் செய்யும்.
    * துவர்ப்பு வாதத்தை அதிகரிக்கும். பித்த கபங்களைக் குறைக்கும். ஆனால் எளிதில் ஜீரணமாகாது. ரத்தத்தை சுத்தம் செய்யும். கொழுப்பைக் குறைக்கும்.