உலகில் உள்ள அனைத்தும் பஞ்ச பூதங்களை ஆதாரமாகக் கொண்டவைதான். உணவும் அதில் அடக்கம்.
* இனிப்பு… பூமி மற்றும் நீரையும்
* கசப்பு… வாயு மற்றும் ஆகாயத்தையும்
* புளிப்பு… அக்னி மற்றும் பூமியையும்
* உப்பு… நீர் மற்றும் அக்னியையும்
* காரம்… அக்னி மற்றும் வாயுவையும்
* துவர்ப்பு… பூமி மற்றும் வாயுவையும்
ஆதாரமாகக் கொண்டுள்ளன.
பிறந்தது முதல் உடலுக்கு இனிப்புச் சுவை ஏற்றதாக இருக்கிறது. பொதுவாக இனிப்புச் சுவை தாதுக்களுக்கு சிறந்த பலம் அளிக்கும். ஆனால் அதிகமாக சாப்பிடும்போது கொழுப்பு, கபம் முதலியவை அதிகரிக்கும். பால், கரும்பு, தேன் ஆகியவை இனிப்புச் சுவை கொண்டவை.
மருத்துவ ரீதியாக இனிப்பிற்குப் பிறகு கசப்பே ஏற்றுக் கொள்ளக்கூடிய சுவை. கிருமி, உடல் எரிச்சல், ரத்தப் போக்கு, மூர்ச்சை, தோல் நோய்கள் போன்றவற்றை நீக்கும் சக்தி அதற்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. கொழுப்பை எளிதில் குறைக்கும் கசப்பு வகை உணவுகள் விரைவாக ஜீரணம் ஆகவும் செய்யும்.
புளிப்புச் சுவை பசியைத் தூண்டும். இருதயத்திற்கு சிறந்தது. ருசியை உண்டாக்கும். கபம், பித்தம் இவற்றை அதிகரிக்கும். புளிப்பு அதிகமாக உட்கொண்டால் உடல் தளர்ச்சி, பார்வை மங்கல், தலை சுற்றல், சொறி, கரப்பான், வீக்கம் போன்றவை ஏற்படும். மனதளவில் எரிச்சலை உண்டாக்கும். நெல்லிக்காய், புளி, மாதுளை, மோர், எலுமிச்சை, மாங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.
உவர்ப்பு சுவை பசியைத் தூண்டும். அதிக வியர்வையை உருவாக்கும். இந்த சுவை கொண்ட உணவை அதிகம் சாப்பிட்டால், மன ரீதியாக கோப தாபம் மற்றும் உணர்ச்சி அதிகமாகும்.
சமையல் உப்பு, இந்துப்பு போன்றவை உவர்ப்புச் சுவை கொண்டவை.
கார வகை உணவுகள் தொண்டை நோய், தோல் தடிப்பு, வீக்கம் போன்றவற்றை ஓரளவு தடுக்கும் தன்மை கொண்டது. கொழுப்பை உலரச் செய்யும். அக்னியைத் தூண்டும். கப நோய்களை குறைக்கும். காரம், மன அளவில் எரிச்சல், கோபம், உணர்ச்சி, உணர்ச்சிக் கட்டுப்பாடின்மை, பரபரப்பு, வேகம் முதலியவற்றை ஏற்படுத்தும்.
பெருங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி போன்றவை துவர்ப்புச் சுவை கொண்டவை.
துவர்ப்பு வாதத்தை அதிகரிக்கும். பித்த கபங்களை குறைக்கும். எளிதில் ஜீரணமாகாது. ரத்தத்தை சுத்தம் செய்யும், காயங்களை ஆறச் செய்யும். அதிகமாகப் பயன்படுத்தும்போது வயிற்றுப் பொருமல், மலச்சிக்கல், உடல் இளைப்பு போன்றவை உண்டாகக்கூடும்.