பிரச்சினை இல்லாத மனிதர்களே கிடையாது. காலையில் எழுந்தது முதல் இரவில் மீண்டும் படுக்கைக்கு செல்லும்வரையில் ஒருமுறை கூட கோபப்படாத ஒருவர் இருந்தால்,
அவர்தான் உண்மையான பாக்கியசாலி. மனித வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது. தீர்வை தேட முயன்றால் பிரச்சினைகளை துரத்திவிட்டு நிம்மதியாக வாழலாம்.பிரச்சினைகளை தீர்த்து மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியம் தருவதுதான் ஆத்ம ஞான யோகம். பிராணாயாமம் என்கிற மூச்சுப் பயிற்சி, தியானம் – இவற்றுடன் இயற்கை உணவு போன்றவை இதன் அடிப்படை வழிமுறைகள் ஆகும்.
சென்னையில் ஆத்ம ஞான யோகா என்ற பெயரில் மூச்சுப்பயிற்சி, தியானம், இயற்கை உணவு பற்றி பயிற்சி அளித்துவரும் 75 வயது தாண்டிய டி.எஸ். நாராயணன் சொல்கிறார்…
“மூச்சை மெதுவாக, முழுமையாக உள்ளிழுத்து, ஓரிரு நொடிகள் நிறுத்தி, மெதுவாக அதேநேரம் முழுமையாக மூச்சை வெளியேற்றுவதே பிராணாயாமம் அல்லது மூச்சுப்பயிற்சி. இதோடு இயற்கை உணவு முறையையும் கடைபிடித்து வந்தால் ஆயுள் நீண்டு கொண்டே போகும். நோய் நொடிகள் நெருங்கவே நெருங்காது. பொதுவாக, மூச்சை வேகமாக உள்ளே இழுத்து வெளியிடுபவர்களின் ஆயுள் குறைந்துவிடும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மூச்சின் வேகத்தை முறைப்படுத்தி ஆயுளை நீட்டித்துக் கொள்ளலாம். அதோடு, உடலின் பல பகுதிகளுக்கு பிராண சக்தி கிடைக்கிறது, மனமும் அமைதி பெறுகிறது. கெட்ட பழக்கவழக்கங்கள் இருந்தால் விலகிவிடும்.
இப்போதெல்லாம் முறையற்ற உணவு பழக்கவழக்கம்தான் பலரால் பின்பற்றப்படுகிறது. நாம் சாப்பிடும் உணவு உடனே செரிமானம் ஆனால்தான் உடலுக்கு நல்லது. ஆனால், இன்றைய உணவு முறைகள் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டுள்ளன.
இன்றைய மக்கள் சாப்பிட்டு வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், வாழத்தான் சாப்பிட வேண்டும். அதாவது, இயற்கை உணவுகளை அளவோடு, நேரம்-காலம் அறிந்து சாப்பிட வேண்டும்.
பொதுவாக, இயற்கை உணவுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை : 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்.
சாத்வீக உணவுகள்தான் நமக்கு முழு சக்தியை கொடுக்கின்றன. பூசணிக்காய், கேரட், வெள்ளரி, புடலங்காய், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் சாத்வீக உணவுகள் பட்டியலில் சேர்கின்றன. இந்த உணவுகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நம்மிடம் சாத்வீக குணங்கள் வளரும். இந்த சாத்வீக காய்கறிகளின் முழுமையான பலன் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் அவற்றை பச்சையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை அதிக நேரம் வேக வைக்க வைக்க அவற்றின் செரிமான நேரமும் அதிகரித்துக்கொண்டே போய்விடும். எண்ணையில் போட்டு அதிகமாக வேக வைத்தால் அதன் செரிமான நேரம் இன்னும் கூடுதலாகும்.
சக்தி விரய உணவுகள் பட்டியலில் வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், வெங்காயம், மிளகாய், காபி, டீ, புகையிலை உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இவற்றை முடிந்தவரை மிதமான அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் கொடூரமான எண்ணங்கள், காம உணர்வு, சோம்பேறித்தனம் அதிகரிக்கும். நீங்கள் அடிக்கடி டீ, காபி குடிப்பவர் என்றால் அதை குறைத்துவிட்டு, அதற்கு பதிலாக சுக்கு காபி குடிக்கலாம்.
சக்தி விரயம் ஆகாத உணவுகள் பட்டியலில் தக்காளி, முளைவிட்ட பயிறு வகைகள் இடம்பெறுகின்றன. தினமும் இரவு உணவில் தக்காளியை சேர்த்து வந்தால் மலச்சிக்கல், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. புற்றுநோயை தவிர்க்கலாம். இது, ஆய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தகாலத்தில் இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழ்ந்ததால் நோயின்றி வாழ்ந்தான். ஆனால், இன்றைய மனிதன் பாதை மாறிவிட்டான். இயற்கை உணவுகளை சாப்பிடப் பழகினால் நோயற்ற வாழ்வு நிலையை மீண்டும் எட்டலாம்” என்கிறார் டி.எஸ்.நாராயணன்.